“5 சவரன் நகைக் கடன் தள்ளுபடி கானல் நீரா?;எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” – எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி..!

Default Image

5 சவரன் நகைக் கடன் தள்ளுபடி கானல் நீரா ? சொல்வது ஒன்று – செய்வது ஒன்று இது தான் திமுக-வின் வாடிக்கை என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும்,இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தற்போதைய திமுக அரசின் செயல்பாடுகளைப் பார்க்கும் போது,

“ஏச்சு பிழைக்கும் தொழிலே சரிதானா?

எண்ணிப் பாருங்க… ஐயா எண்ணிப் பாருங்க”

என்று புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் பாடிய பாடல் தான் நினைவுக்கு வருகின்றது.

திமுக-வின் விடியா அரசு:

ஏமாறுவதற்கு ஆள் இருக்கின்றவரை ஏமாற்றிக் கொண்டிருக்கலாம் என்ற கொள்கையின் அடிப்படையில், திமுக-வின் விடியா அரசு செயல்படுகிறது. இந்த ஆட்சியின் 100 நாள் செயல்பாடுகளிலேயே ஏமாற்றம் அடைந்த விழி பிதுங்கி நிற்கிறார்கள். மக்கள்

பசப்பு வார்த்தைகள்:

“நாங்கள் ஆட்சிக்கு வந்தால், 5 சவரன் வரை நகைக் கடன் தள்ளுபடி செய்வோம் என்று வாக்குறுதி அளித்தவர்கள், இப்போது பசப்பு வார்த்தைகளைப் பொழிகிறார்கள். தமிழக மாணவர்கள் வங்கிகளில் வாங்கிய உயர் கல்விக்கான கல்விக் கடனை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளித்து, வாக்குகளைப் பெற்ற ஆட்சியாளர்கள் அதை சுத்தமாக மறந்துவிட்டார்கள்.”

தற்போது நடைபெற்று வரும் திமுக அரசு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற, பல்வேறு நிபந்தனைகளை விதிக்க இருப்பதாகச் செய்திகள் வருகின்றன.

கடன் ரத்து:

5 சவரன் நகைக் கடன் தள்ளுபடி சலுகை பலருக்கு கிடைக்கக் கூடாது என்று என்னும் அளவுக்கு நிபந்தனைகளை விதிக்க திமுக அரசின் கூட்டுறவுத் துறை முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வருகின்றன.
கூட்டுறவு சங்கங்களில் நகைக் கடன் பெற்ற அனைவரும், கடன் ரத்தாகும் என்று மகிழ்ச்சி அடைந்த நிலையில், 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2020-ஆம் ஆண்டுவரை பெறப்பட்ட நகைக் கடன்களை மட்டுமே தள்ளுபடி செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாம். இதை செயல்படுத்துவதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

நகைக் கடன் தள்ளுபடி பெற,

  • கடன் பெற்றவர் கூட்டுறவு சங்கங்களில் பயிர்க் கடன் பெற்றிருக்கக் கூடாது. மத்திய-மாநில அரசு ஊழியராக இருக்கக் கூடாது…
  • வருமான வரி செலுத்துபவராக இருக்கக் கூடாது…
  • ஆண்டு வருவாய் ஒரு லட்சத்திற்குமேல் இருக்கக் கூடாது…
  • கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியக் கூடாது…
  • குடும்பத்தில் ஒருவர் மட்டுமே கடன் பெற்றிருக்க வேண்டும்…

என்பது போன்ற பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. இதனால், நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று இந்த அரசு அறிவித்தாலும், நிபந்தனைகளால், பலரால் கடன் தள்ளுபடி சலுகை பெற முடியாது.

கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மூலம் இவைகளை தெரிந்துகொண்ட மக்கள் கொதிப்படைந்துபோய் உள்ளனர்.

“எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே”.

“சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்

சமயம் பார்த்து பல வழிகளில் …..”

என்று புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் பாடியதைப் போல, இந்த அரசை மக்கள் குறை கூறத் தொடங்கி உள்ளனர்.

தமிழகத்தின் கடன்:

தமிழகத்தின் கடன் அளவு எவ்வளவு என்று தேர்தல் சமயத்தில், திமுக-வின் தேர்தல் அறிக்கையிலேயே தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் அறிந்துதான், நிறைவேற்ற முடியாத 505-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை திமுக தலைவர் அள்ளி வீசியிருக்கிறார். ஆனால், அதனை நிறைவேற்ற எண்ணம் இல்லாமல், நிதி அமைச்சர் அவர்களை வைத்து ஒரு வெள்ளை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளனர். அந்த வெள்ளை அறிக்கையும், ஒவ்வொரு ஆண்டும் அம்மா அரசில் மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்கள் வெளியிட்ட நிதி அறிக்கையின் தொகுப்பாகவே உள்ளது.

உள்ளங்கை நெல்லிக்கனி:

மேலும், இந்த நிதி அறிக்கையில் தமிழ் நாட்டின் கடன் இவ்வளவு உள்ளது என்று புதிதாக கண்டுபிடித்தது போலவும், இதனால் நலத் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்த பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்படும் என்றும், அரசு ஊழியர்களுக்கு நாங்கள் தான் பாதுகாப்பு என்று கூறிக்கொள்ளும் திமுக, அவர்களது பணப் பயனில் கை வைப்பதும், தேர்தல் அறிவிப்புகளில் ஒன்றிரண்டை நிறைவேற்றுவதாகக் கூறி, அதிலும் புதிய புதிய நிபந்தனைகளை விதித்து, பயனாளிகளின் எண்ணிக்கையை பெருமளவு குறைக்கத் திட்டமிட்டுள்ளதும், ‘உள்ளங்கை நெல்லிக்கனி’ போல் தெளிவாகத் தெரிகிறது.

போராட்டக்களம்:

எனவே, திமுக-வின் தேர்தல் வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த தமிழ் நாட்டு மக்களை இனியும் ஏமாற்றாமல், அவர்கள் விழிப்படைந்து போராட்டக் களத்தில் குதிப்பதற்கு முன்பு, அதிர்ஷ்டவசத்தால் ஆட்சிக்கு வந்த இந்த அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்.

கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடன்களையும், மற்றும் 5 பவுன் வரை அடமானம் வைத்து நகைக் கடன் பெற்றவர்களுடைய நகைக் கடன்களையும் உடனடியாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்”,எனத் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்