திருத்தணி அருகே நேருக்கு நேர் பேருந்து, லாரி மோதி விபத்து.. 5 பேர் பலி.!
திருத்தணி அருகே அரசுப் பேருந்தும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர்.

திருத்தணி : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே, அரசுப் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கே.ஜி.கண்டிகை என்ற பகுதியில் நிகழ்ந்த இந்த விபத்தில், படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர், அருகிலுள்ள திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள போலீசார், விபத்திற்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், டிப்பர் லாரி அதிவேகமாக சென்றதால் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் விபத்திற்கு காரணமான டிப்பர் லாரி ஓட்டுநர் தப்பி ஓடியுள்ளதாக கூறப்படுகிறது.