5 வயது சிறுவனை கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை!
நெல்லை மாவட்ட முதலாவது அமர்வு குற்றவியல் நீதிமன்றம், 5 வயது சிறுவனை கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
நெல்லை மாவட்டம் பேட்டை பகுதியை சேர்ந்த இசக்கியப்பன் என்பவரது குடும்பத்தினருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கும் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதியன்று இசக்கியப்பன் வீட்டிற்குள் புகுந்த ஆறுமுகம், இசக்கியப்பனின் மனைவி பிரேமா மற்றும் 5 வயது குழந்தை தருணை சரமாரியாக வெட்டியுள்ளார்.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த 5 வயது சிறுவன் தருண் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து ஆறுமுகத்தை கைது செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட முதலாவது அமர்வு குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி அப்துல்காதர் இன்று தீர்ப்பு வழங்கினார்.
ஆறுமுகம் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு தூக்குதண்டனையும் 5 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபாராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.