4-வது நாளாக தோல்வி – தொடரும் நீலகிரி கொம்பன் சங்கரின் அட்டூழியம்!
மூன்று பேரை கொலை செய்த நீலகிரி காட்டு யானை சங்கரை பிடிக்கும் முயற்சி நான்காவது நாளாக தோல்வியில் முடிந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள சேரம்பாடி, கொளப்பள்ளி ஆகிய பகுதிகளில் சுற்றித் திரிந்த சங்கர் எனும் பெயருடைய காட்டு யானை கடந்த டிசம்பர் மாதம் மூன்று பேரை மிதித்துக் கொன்றது. இந்நிலையில் இந்த யானை குறித்து பொது மக்களிடையே அதிக அச்சம் நிலவிய காரணத்தினால் தற்போது இந்த யானையை பிடிக்க வேண்டும் என்ற முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த யானை ஏற்கனவே கேரள வனப்பகுதிக்கு சென்று விட்ட நிலையில், கடந்த வாரம் சேரம்பாடி வனப்பகுதிக்கு மீண்டும் திரும்பியது.
இதனால் பொதுமக்களிடையே அதிகம் அச்சம் ஏற்பட்ட நிலையில், தற்போது இந்த சங்கர் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கான முயற்சிகள் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வருகிறது. கடந்த மூன்று நாட்கள் முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து, நேற்று 4-வது நாளாக நடைபெற்ற முயற்சியில் புதுப்பாடி என்ற இடத்தில் காட்டு யானையை வனத்துறையினர் சுற்றி வளைத்தாலும் யானை மரங்கள் நிறைந்த அடர்த்தியான பகுதிக்குள் ஓடி மறைந்து கொண்டதால் மயக்க ஊசி செலுத்த முடியாமல் போயுள்ளது. இருப்பினும் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். ஆனாலும் நேற்று 4-வது நாளாக சங்கர் யானையைப் பிடிக்கும் முயற்சி தோல்வியில் தான் முடிந்துள்ளது.