அதிக கட்டணம் வசூலித்த பள்ளி தாளாளர் உட்பட 4 பேர் கைது….!
சென்னை: கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் வேளாங்கன்னி மெட்ரிகுலேஷன் என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு கடந்த 4 ஆண்டுகளாக சிபிஎஸ்இ பாடம் நடத்துவதாக கூறி அதற்காக அதிக கட்டணம் வசூலித்துள்ளனர். ஆனால், சிபிஎஸ்இக்கான அங்கீகாரம் அரசிடம் பெறவில்லை என்பது பெற்றோருக்கு தெரியவந்தது.
இதுகுறித்து அவர்கள் அளித்த புகாரின் பேரில், கல்வி துறை அதிகாரிகள், மற்றும் போலீசார் பள்ளி நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தை நடத்தினர். சிபிஎஸ்இக்கு வசூலித்த அதிக கட்டணத்தை திருப்பி தருவதாக பள்ளி நிர்வாகத்தினர் அப்போது கூறினர். ஆனால், அதன்படி பணத்தை திருப்பி தராமல் மீண்டும் சிபிஎஸ்இ கட்டணத்தை கட்ட வேண்டும் என பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதுபற்றி மாணவனின் தந்தை வெங்கடேசன் என்பவர் கடந்த வாரம் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து, கொடுங்கையூர் போலீசார் பள்ளி தாளாளர் சந்தானமுத்து, பள்ளி நிர்வாகி தேவராஜன், தாளாளரின் மருமகன் ரவிதுரைசிங்கம், மற்றும் அவரது நண்பர் ரமேஷ் ஆகியோரை நேற்று மாலை போலீசார் கைது செய்தனர்.