நம்மைக் காக்கும் 48 திட்டம் – தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!
இன்னுயிர் காப்போம், நம்மைக் காக்கும் 48 திட்டத்திற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.
தமிழகத்தில் சாலை விபத்துகள், உயிரிழப்புகளை தடுப்பதற்கு, விபத்தில் சிக்குவோரின் சிகிச்சைக்காக உதவும் வகையில், இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48 என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48 திட்டத்தை முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தை பொறுத்தவரை தமிழ்நாட்டில் எந்தப் பகுதியில் விபத்து நடந்தாலும், விபத்து நடந்த பகுதியில் விபத்துக்கு உள்ளானவரை மருத்துவமனையில் சேர்க்கும் நபருக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத் தொகையும், விபத்தில் சிக்கியவருக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் சிகிச்சையும் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை உடையவர்கள், இல்லாதவர்கள், பிற மாநிலத்தவர், வெளிநாட்டவர் என அனைவருக்கும் வருமான வரம்பு ஏதும் கணக்கில் கொள்ளாமல், தமிழ்நாட்டின் எல்லைக்குள் ஏற்படும் சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கு மருத்துவ செலவை அரசே ஏற்கும் என்பதுதான் இந்த “இன்னுயிர் காப்போம்” என்ற திட்டமாகும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட 81 மருத்துவ சிகிச்சை முறைகளுக்கு நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சம் வரை சிகிச்சை கட்டணத்தில் ரூ.1 லட்சம் அரசு சார்பில் வழங்கப்படும். இந்த திட்டத்திற்காக 201 அரசு மற்றும் 408 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 609 மருத்துவமனைகள் உரிய தகுதியின் அடிப்படையில் இணைக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சைகள் வழங்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் பற்றிய விவரங்கள் மாவட்ட வாரியாகப் பட்டியலிடப்பட்டு பொதுமக்கள் அனைவரும் அறியும் வகையில் https://cmchistn.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த நிலையில், இன்னுயிர் காப்போம், நம்மைக் காக்கும் 48 திட்டத்திற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
நம்மைக் காக்கும் 48 திட்டம் – தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!#TNGovt pic.twitter.com/qh6aHMxjjr
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) December 19, 2021