வங்கதேச வன்முறைகள்… தாயகம் திரும்பிய 42 தமிழக மாணவர்கள்.!
சென்னை: வங்கதேச போராட்டத்தால் தாயகம் திரும்ப முடியாமல் தவித்த 42 தமிழக மாணவர்கள் அரசு உதவியுடன் இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.
வங்கதேசத்தில் அந்நாட்டு சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் சந்ததிகளுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டதிருத்தத்தை அந்நாட்டு அரசு கொண்டு வந்தது. அதற்கு எதிராக அந்நாட்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்தனர். கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன.
இதனால், வங்கதேசத்தில் படித்து வந்த இந்திய மாணவர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்தனர். அந்தந்த கல்லூரி நிர்வாகங்கள் மாணவர்களை வங்கதேச – இந்திய எல்லையில் இறக்கிவிடப்பட்டனர். அங்கிருந்த மாணவர்கள் எல்லை கடந்து மேற்கு வங்கத்திற்கு கடந்த வாரம் வந்திருந்தனர் .
மேற்கு வங்கத்தில் தஞ்சம் புகுந்து இருந்த தமிழக மாணவர்கள் தமிழக அரசிடம் உதவி கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தனர். இதனை அடுத்து, தமிழ்நாடு வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் , வங்கதேச கலவரத்தால் பாதிக்கப்பட்டு தாயகம் திரும்ப முடியாமல் தவித்த மாணவர்களை மீட்கும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது என தெரிவித்து இருந்தார்.
அதன் பிறகான முயற்சியின் பலனாக இன்று 42 தமிழக மாணவர்கள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் வரவேற்றனர். இந்த தகவலானது PTI செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.