முதல் தொகுதித் தேர்வுக்கான வயது வரம்பை 40 ஆக உயர்த்த வேண்டும் என்பது சலுகை கேட்பது அல்ல. மாறாக, பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் கோருவது ஆகும். 2001-2006 அதிமுக ஆட்சிக் காலத்தில் ஆசிரியர்கள், மருத்துவர்கள் தவிர்த்த மற்ற பணியிடங்களை நிரப்ப தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் முதல் தொகுதி பணிகள் உட்பட எந்த பணிகளுக்கும் ஆட்கள் தேர்வு செய்யப்படவில்லை.
இதனால், பாதிக்கப்பட்ட பட்டதாரிகளின் நலன் கருதி போட்டித் தேர்வுகளில் பங்கேற்பதற்கான வயது வரம்பை தளர்த்த வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். 2006-11 ஆட்சியில் அதையேற்ற அப்போதைய முதல்வர் கருணாநிதி, போட்டித் தேர்வுகளில் பங்கேற்பதற்கான வயது வரம்பை 35 ஆக உயர்த்தி ஆணையிட்டார்.
இதனால் இட ஒதுக்கீட்டுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் தங்களின் நாற்பதாவது வயது வரை போட்டித் தேர்வுகளில் பங்கேற்பதற்கு வழிவகை செய்யப்பட்டது. எனினும், கடந்த 2011 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு, முந்தைய ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்துவிட்டது. இதனால் பொதுப்பிரிவினரில் 30 வயதைத் தாண்டியவர்களும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினரில் 35 வயதைத் தாண்டியவர்களும் அரசு வேலைவாய்ப்பை நினைத்துப் பார்க்க முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது.
இந்திய அளவில் 11 மாநிலங்களில் முதல் தொகுதி தேர்வுகளில் பங்கேற்பதற்கான வயது வரம்பு தமிழகத்தை விட அதிகமாக உள்ளது. அதேபோல், குஜராத், ஹரியாணா, பீகார், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய 6 மாநிலங்களில் முதல் தொகுதி தேர்வுகளில் பங்கேற்பதற்கான வயது வரம்பு 45 ஆக உள்ளது.
தமிழகத்தில் முதல் தொகுதி தேர்வுக்கான அதிகபட்ச வயது வரம்பு 40-லிருந்து 35 ஆக குறைக்கப்பட்ட நிலையில் அதை 37 ஆக மட்டும் உயர்த்துவதால் எந்த பயனும் ஏற்படாது. எனவே, முதல்தொகுதி தேர்வுக்கான வயது வரம்பை 40 ஆக அரசு உயர்த்த வேண்டும்.
இது ஒருபுறமிருக்க தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா பெயரைச் சூட்டப்போவதாக தமிழக அரசு அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒருவரின் பெயரை கல்வி நிலையத்திற்கு சூட்டுவது ஏற்கத்தக்கதல்ல.
எனவே, மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கு இப்போதுள்ள பெயரே நீடிக்கும் என தமிழக அரசு அறிவிக்க வேண்டும்” என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.