ரஷ்யாவில் ஆற்றில் உயிரிழந்த 4 தமிழக மாணவர்கள்.! இரங்கலைத் தெரிவித்த முக ஸ்டாலின்.!
ரஷ்யாவில் வோல்கா ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 4 தமிழக மாணவர்களின் குடும்பத்திற்கு முக ஸ்டாலின் இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் வோல்காகிராட் பகுதியில் உள்ள மருத்துவ பல்கலைகழகத்தில் தமிழகத்தை சேர்ந்த பல மாணவர்கள் படித்து வருகின்றனர். அதில் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அங்குள்ள வோல்கா நதிக்கரைக்கு சென்று குளிக்கும் போது ஒரு மாணவரை தண்ணீர் அடித்து சென்று விட்டது. அவரை காப்பாற்ற முயற்சித்த சக மாணவர்களில் மூன்று பேரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர்.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் சென்னையை சேர்ந்த ஸ்டீபன், தாராபுரத்தை சேர்ந்த முகமது ஆஷிக், திட்டக்குடியை சேர்ந்த ராமு விக்னேஷ் மற்றும் சேலத்தை சேர்ந்த மனோஜ் என்பது தெரிய வந்துள்ளது. இறந்த 4 பேரின் உடலை விரைவில் தமிழகம் கொண்டு வருமாறு மாணவர்களின் பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு முக. ஸ்டாலின் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். அதில் ரஷ்யாவில் வோல்கா ஆற்றில் தமிழக மாணவர்கள் 4 பேர் இறந்ததை அறிந்து மனம் உடைந்தது என்றும், மகன்களை இழந்த குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் இந்த கடினமான நேரத்தில் அந்த குடும்பங்களுக்கு தேவையான உதவி வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு இந்திய வெளியுறவு அமைச்சரான எஸ். ஜெயசங்கரிடம் கேட்டு கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Heartbroken to hear about the drowning of 4 Tamil students in the #Volga river in Russia. I offer my sincere condolences to the families.
I urge Hon.@DrSJaishankar to ensure that necessary assistance is provided to the families through this difficult time.
— M.K.Stalin (@mkstalin) August 10, 2020