தமிழகத்தில் இன்று முதல் 4 சிறப்பு ரயில்கள் இயக்கம்.!
தமிழகத்தில் இன்று முதல் 4 சிறப்பு ரயில்கள் இயக்கம். மண்டலம் விட்டு மண்டலம் செல்ல ரயில்களில் பயணித்தால் இ-பாஸ் பெறுவது கட்டாயம்.
நாடு முழுவதும் கொரோனா வைரசால் 5 ஆம் கட்ட ஊரடங்கு ஜூன் 30 ஆம் தேதி வரை நீடிக்கப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்தது. ஜூன் 1 தேதி முதல் 30 தேதி வரை படிப்படியாக தளர்வுகளுக்கான அறிபவிப்புகள் UNLOCK 1.0 என்ற அடிப்படையில் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தது. அதன்படி, தமிழகத்திலும் ஜூன் 30 வரை ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே 4 ம் கட்ட ஊரடங்கில் தளர்வுகளின்படி, சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்த, 200 ரயில்களில் தமிழகத்துக்கு எந்த ரயிலும் அறிவிக்கப்படவில்லை. இதனிடையே, தமிழகத்திற்கு ஏசி இல்லாத 4 சிறப்பு ரயில்களை இயக்குமாறு ரயில்வே வாரியத்திற்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. அந்த கோரிக்கையை ஏற்று, தமிழகத்தில் கோவை-காட்பாடி, கோவை-மயிலாடுதுறை, மதுரை-விழுப்புரம், திருச்சி-நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் இயக்குமாறு தமிழக அரசு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் அந்த வழித்தடத்தில் 4 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. அதன்படி, கோவை – மயிலாடுதுறை, மதுரை-விழுப்புரம் விரைவு ரெயில், திருச்சி-நாகர்கோவில் விரைவு ரெயில், கோவை-காட்பாடி விரைவு ரெயில் ஆகிய ரயில்கள் இன்று முதல் இயக்கப்பட உள்ளன. மதுரை-விழுப்புரம், நாகர்கோவில்-திருச்சி இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்கள் தினமும் இயக்கப்பட உள்ளன.
இன்று முதல் இயக்கப்படும் 4 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு கடந்த இரு தினங்களுக்கு முன்பாக தொடங்கியது. மண்டலம் விட்டு மண்டலம் செல்ல ரயில்களில் பயணித்தால் இ-பாஸ் பெறுவது கட்டாயம் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் ரயில் புறப்படுவதற்கு 90 நிமிடங்களுக்கு முன் ரயில் நிலையத்திற்கு வரவேண்டும். பயணச்சீட்டு உள்ள பயணிகள் மட்டுமே ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். ரயில் பயணிகள் உணவு மற்றும் இதர உணவுப்பொருட்களை வீட்டிலிருந்தே கொண்டு வர அறிவுறுத்தல் அளிக்கப்பட்டுள்ளது.