உஷார் மக்களே: மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் பெண்களை பிடிக்க 4 தனிப்படை அமைப்பு.!
- சென்னை மாநகர போக்குவரத்து போலீசாருக்கு ஸ்மார்ட் போக்குவரத்து ரோந்து வாகனம் அறிமுகம்.
- தமிழகத்தில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் பெண்களை பிடிக்க சென்னையில் பெண் உதவி ஆய்வாளர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைப்பு.
தமிழக போக்குவரத்து காவல் துறையில் அதிரடியான பல திட்டங்கள் அண்மை காலமாக அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் முதல்முறையாக சென்னை மாநகர போக்குவரத்து போலீசாருக்கு ஸ்மார்ட் போக்குவரத்து ரோந்து வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் ரோந்து வாகனத்தில் ஒரு காவலர் நின்று பயணம் செய்யும் வகையில் இருக்கிறது.
பெண்கள் குழந்தைகள் பாதுகாப்புக்காக புதிய திட்டம் அறிமுகம்.!
இதேபோல் இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் பெண்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கவும், சாலைகளில் விதிகளை மீறும் வாகனம் ஓட்டும் பெண்கள் மீது வழக்கு பதிவு செய்யவும், 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. பெண் உதவி ஆய்வாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த படையில் ஒரு தலைமை காவலர், இரண்டு காவலர்கள் வீதம் நான்கு படைகள் சென்னை மாநகரத்தின் 4 மண்டலத்திற்கு அமைக்கப்பட்டுள்ளன.
இந்த தனிப்படையில் உள்ள பெண் போலீசார் தங்கள் உடையில் சிறிய கேமராக்கள் பொருத்தியபடி கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். இந்த இரண்டு புதிய திட்டமும் மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகே மாநகர போக்குவரத்து போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பொதுமக்கள் முன்னிலையில் நேற்று தொடங்கி வைத்தார்.
பின்னர் இந்த நிகழ்ச்சியில் மாநகர போக்குவரத்து கூடுதல் கமிஷனர் அருண், கிழக்கு மண்டல இணை கமிஷனர் சுதாகர், போக்குவரத்து இணை கமிஷனர் எழில் அரசன், வடக்கு மண்டல இணை கமிஷனர் ஜெயகவுரி உள்பட பலர் பங்கேற்றனர்.