காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழப்பு; பள்ளிக்கு இன்று விடுமுறை.!
காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழந்த நிலையில் பள்ளிக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் பிலிப்பட்டி ஊராட்சியில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப் பள்ளியிலிருந்து 4 மாணவிகள் நேற்று காவிரி ஆற்றில் குளிக்க சென்ற நிலையில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மாணவிகள் விளையாட்டுப்போட்டிக்காக திருச்சிக்கு அழைத்துசெல்லப்பட்ட நிலையில் போட்டியை முடித்துக்கொண்டு அந்த மாணவிகள் மாயனூரில் உள்ள காவிரி கரையோர ஆற்றங்கரைக்கு குளிக்கசென்ற போது இந்த அசம்பாவிதம் நடைபெற்றுள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து மாணவிகளை அழைத்து சென்ற நடுநிலை பள்ளி ஆசிரியர்கள் இருவரையும் கல்வித்துறை அரசு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்துள்ளனர். இந்த நிலையில் பள்ளிக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.