மோசமான வானிலை: தரையிறங்க முடியாமல் தவிக்கும் 4 விமானங்கள்!
மோசமான வானிலை காரணமாக சென்னையில் தரையிறங்க முடியாமல் விமானங்கள் வானில் வட்டமடித்து வருகிறது.
சென்னை : ஃபெஞ்சல் புயலால் சென்னையில் மணிக்கு 40 கி.மீ வேகத்துடன் கூடிய கனமழை பெய்கிறது. தற்பொழுது, புதுச்சேரிக்கு கிழக்கே 180 கி.மீ., சென்னைக்கு தென்கிழக்கே 190 கி.மீ. தொலைவில் ஃபெஞ்சல் புயல் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயல் கரையை கடக்கும்போது 70 – 80 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில், சென்னையில் தற்போது சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வரும் நிலையில் விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆம், மோசமான வானிலை காரணமாக புனே, மும்பை, மஸ்கட், குவைத்தில் இருந்து வந்த 4 விமானங்கள் சென்னை ஏர்போர்டில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடிக்கின்றன. இந்த விமானங்களை சென்னையில் தரையிறக்கலாமா அல்லது பாதுகாப்பு கருதி வேறு ஏர்போர்டில் தரையிறக்கலாமா என அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடர் மோசமான வானிலை காரணமாக, அந்த விமானங்கள் கோயம்புத்தூர் அல்லது மதுரை ஏர் போர்டில் தரையிறக்கலாமா என திட்டமிட்டு வருகிறார்கள். ஆனால், முதலில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த குவைத் விமானம் தரையிறங்கியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஃபெஞ்சல் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக சிங்கப்பூர், திருச்சி, மங்களூரு உள்பட பல பகுதிகளில் இருந்து சென்னை வரும் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.