தமிழகத்தில் ஒரே நாளில் 4 பேர் உயிரிழப்பு ! கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41ஆக உயர்வு
தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41-ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு செல்கிறது .கோயம்பேடு சந்தையை மையமாக கொண்டு சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது.கடந்த சில நாட்களாக சென்னையில் கொரோனா பாதிப்பு இரட்டை இலக்கத்தில் இருந்து மூன்றிலக்கமாக மாறியுள்ளது.நேற்று மட்டும் சென்னையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 316 ஆகும்.இதனால் அங்கு மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2644 ஆகும்.
இதனிடையே இன்று காலை சென்னையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.அதன்படி சூளைமேட்டை சேர்ந்த கோயம்பேடு சந்தை வியாபாரி (வயது 56) ஒருவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார்.இவரை போலவே சூளைமேட்டை சேர்ந்த 80 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா சிகிச்சைக்காக கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
தாம்பரத்தை சேர்ந்த 77 வயது முதியவர் ஒருவர் கொரோனாவிற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.திருவேற்காட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராயபேட்டையை சேர்ந்த 72 வயது மூதாட்டி ஒருவரும் உயிரிழந்துள்ளார்.இந்த மூதாட்டியின் குடும்பத்தில் உள்ள 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.இதனால் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 -ல் இருந்து 41 ஆக அதிகரித்துள்ளது.