4 முறை நிரம்பிய “மேட்டூர் கரைபுரண்டு ஓடாத கடைமடை…!” நிலையில் “பயிர் கருகவில்லை கடைமடையில்”அமைச்சர் பேச்சு…!!
டெல்டா மாவட்டங்களில் எந்த இடத்திலும் சம்பா பயிர்கள் கருகவில்லை என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.ஆனால் காவிரியில் வெள்ளம் வந்தும் 4 முறை மேட்டூர் அணை நிரம்பியும் இதுவரை கடைமடை வரை தண்ணீர் வரவில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில்கடைமடை பகுதியான நாகையில் போதுமான தண்ணீர் வந்து சேராததால், நேரடி நெல்விதைப்பு செய்த பயிர்கள் கருகி வருகின்றன. இந்நிலையில், முக்கொம்பு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி நாகையை அடுத்த சிக்கலில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், நாகை முதல் திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விவசாயிகளுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட செய்தனர்.
இதேபோல், நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வராததால் ஆறு, வாய்க்கால், குளங்கள் வறண்டு போய் உள்ளன. இதனால் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள், நேரடி விதைப்பு செய்யப்பட்ட பயிர்கள் தண்ணீரின்றி காய்ந்து கருகி கிடக்கிறது. குடிநீர் கூட கிடைக்காத அவல நிலை ஏற்பட்டுள்ளதாக கூறி, பொறையாறை அடுத்துள்ள ராஜீவ்புரத்தில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே டெல்டா மாவட்டங்களில் எந்த இடத்திலும் சம்பா பயிர்கள் கருகவில்லை என்றும், விளை நிலங்களுக்கு தண்ணீரை கொண்டு செல்வதற்கான அனைத்து பணிகளும் நடைபெற்று வருவதாகவும் உணவுத் துறை அமைச்சர் காமராஜ் கூறினார்.
பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடையாவிட்டால் அமைச்சர்களுக்கு எதிராக கருப்பு கொடி காட்டும் போராட்டங்கள் நடைபெறும் என அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் எச்சரித்துள்ளார்.
இந்த ஆண்டு மேட்டூர் அணை 4 முறை நிரம்பிய போதிலும், கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை என்பதே விவசாயிகளின் வேதனையாக உள்ளது.
DINASUVADU