4 நாட்களில் மட்டும் சென்னையில் 2,750 ரவுடிகள் கைது..!
இரண்டாயிரத்து 750 ரவுடிகள் , சென்னையில் கடந்த 4 நாள்களாக நடத்தப்பட்ட போலீசாரின் தீவிர வாகனச் சோதனை நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் கடந்த சில தினங்களாக நகைகள் மற்றும் செல்போன் பறிப்பு சம்பவங்கள் அரங்கேறியது குறித்த புகார்கள் அதிகரித்தன. இதன் உச்சகட்டமாக ஒரே நாளில் 14 செல்போன் பறிப்புகளும் நடந்தன. இவை தவிர பைக் ரேஸ் புகார்களும் தொடர்ந்தன. காமராஜர் சாலை, பசுமைவழிச்சாலை ஆகிய பகுதிகளில் பைக் ரேஸ்கள் அதிக அளவில் நடந்து வந்தன. இவை போன்ற குற்றச் சம்பவங்களைத் தடுக்க, சென்னை முழுவதும் கடந்த 4 நாள்களாக போலீசார் ஸ்டாமிங் ஆபரேஷன் நடத்தினர்.
சென்னை காவல் ஆணையர் ஏ கே விஸ்வநாதனின் உத்தரவுப்படி, இந்தப் பணிகளில் இரவுப்பணி காவலர்களுடன், கூடுதலாக 2 ஷிப்டு போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்கள் சென்னை முழுவதும் இரவு நேரத்தில் முக்கிய இடங்களில் சாலைகளில் வாகனச் சோதனைகளில் ஈடுபட்டனர்.
இந்த அதிரடி நடவடிக்கைகளில், ஒரே இரவில் ஆயிரம் ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். கடந்த 4 நாட்களாக போலீசார் தொடர்ந்து நடத்திய வாகனச் சோதனையில், மொத்தம் இரண்டாயிரத்து 750 ரவுடிகள் போலீசாரிடம் பிடிபட்டுள்ளனர். இவர்களை அதிரடியாக கைது செய்த போலீசார், சிறையில் அடைத்துள்ளனர். இவர்களில் 68 பேர் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் ஆவர்.
53 பேர் தலைமறைவு குற்றவாளிகள் ஆவர். அதிக அளவில் குற்றவாளிகள் பிடிபட்டிருப்பதால், போலீசார் இந்த சோதனையைத் தொடர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன்பேரில் இரவு நேர தீவிர வாகனச்சோதனையை தொடர்வது குறித்து விரைவில் பரிசீலிக்க உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.