39 தொகுதிகள்.. 38,500 ஊழியர்கள்.. வாக்கு எண்ணிக்கை பணிகள் தீவிரம்..!
சென்னை : நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் நாளை நடைபெறவுள்ளன. 543 தொகுதிகள் கொண்ட இந்திய நாடாளுமன்றத்துக்கு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்றன.
இந்நிலையில், பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் நாளை (04.06.2024) காலை 8 மணிக்கு தொடங்கப்படவுள்ளன. மதியம் 12 மணிக்குள் முன்னிலை நிலவரம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் நாளை 39 மையங்களுக்கான வாக்கு எண்ணிக்கை 39 மையங்களில் உள்ள 43 கட்டிடங்களில் நடைபெற உள்ளது நடைபெறவுள்ளது. இந்த மையங்களில் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு அறை வீதம் 234 அறைகளில் வாக்கு எண்ணும் பணி நடைபெற உள்ளது.
அனைத்து வேட்பாளர்களும் முகவர்களும் காலை 6 மணிக்கு முன்னதாக மையங்களுக்குள் நுழைய வேண்டும். முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்குகிறது. பின்னர், 8.30 மணிக்கு மின்னணு எந்திரங்களில் பதிவான வகுக்ககள் எண்ணும் பணிகள் தொடங்கப்படும்.
வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள்.
தமிழகத்தில் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 14 மேஜைகள் என 3,300 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர், ஒரு வாக்கு எண்ணும் உதவியாளர் மற்றும் ஒரு நுண் பார்வையாளர் என மூன்று அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள்.
இந்த பணியில் 38,500 பேர் பணியில் ஈடுபடவுள்ளனர். வாக்கு எண்ணும் பணியில் 10,000 பேர், உதவியாளர்கள் 24,000 பேர், நுண் பார்வையாளர்கள் 4,500 பேரும் ஈடுபடுகிறார்கள்.
ஒவ்வொரு கட்சி அலுவலகத்திலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். வாக்கு எண்ணும் மையங்களில் மட்டும் 42 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
பதற்றமான இடங்களை கண்காணிக்க, தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், பாதுகாப்புப் பணியை 15 கம்பெனி துணை ராணுவப் படை மேற்கொள்கிறது.