நேற்று அன்பில் மகேஷ்., இன்று சேகர் பாபு.! முதலமைச்சரை நெகிழ வைத்த அமைச்சர்கள்.,
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சென்னையில் உள்ள மருந்தீசுவரர் திருக்கோயிலில் 31 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.
சென்னை : இன்று தமிழக அரசின் அறநிலையத்துறை சார்பில் தமிழ்நாடு முழுக்க பல்வேறு கோயில்களில் 304 இணைகளுக்கு (ஜோடிகளுக்கு) திருமணம் நடைபெற்றது. சென்னை திருவான்மியூர் மருந்தீசுவரர் கோயிலில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 31 இணைகளுக்கு திருமணம் நடைபெற்றது.
இந்த விழாவில், அறநிலையத்துதுறை அமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டனர். திருமணமாகிய இணைகளுக்கு தாலிக்கு 4 கிராம் தங்கம் , ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் ஆகியவை வழங்கப்பட்டன.
இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை வெகுவாக பாராட்டினார். அவர் பேசுகையில், ” நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின், வெளிமாவட்டங்களுக்கு நேரடியாக சென்ற நிகழ்ச்சிகள், வீடியோ கான்பிரஸ் மூலம் பங்கேற்ற பல்வேறு துறை நிகழ்ச்சிகள் என அனைத்தையும் கணக்கிட்டு பார்த்தேன். அதில் முதல் வரிசையில் அறநிலையத்துறை தான் இருக்கிறது.
அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் சீரிய முயற்சியால் 31 இணைகளுக்கு திருமணம் செய்து வைத்து வாழ்த்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இந்த துறை நிகழ்ச்சி மட்டுமல்ல எல்லா துறை நிகழ்ச்சியிலும் சரிசமமாக கலந்து கொண்டு வருகிறேன்.
அறநிலையத்துறை பொறுத்தவரை இரவு பகல் பாராமல் உழைக்கும் செயல் வீரர் சேகர் பாபு நமக்கு கிடைத்துள்ளார். அவரின் சீரிய முயற்சியில் அறநிலையத்துறையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கோயில்கள் அதன் பழமை மாறாமல் 2,226 கோயில்கள் சீரமைக்கப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றுள்ளது. இது மிகப்பெரிய சாதனை.
10 ஆயிரம் கோயில்களுக்கு திருப்பணி நடைபெற்று வருகிறது. 1,103 கோடி ரூபாய் நன்கொடை பெற்று அந்த செலவில் 9,123 கோயில்களில் திருப்பணி நடைபெற்று வருகிறது. 7,069 ஏக்கர் கோயில் நிலம் மீட்கப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.6,792 கோடியாகும். மேலும், 1,74,894 ஏக்கர் கோயில் நிலங்களில் எல்லை கோடுகள் வைக்கப்பட்டு கோயில் நிலங்கள் பதுக்கப்படுகின்றன. ஆயிரம் ஆண்டு பழமையான கோயில்களை சீரமைக்க ரூ.426 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது ” என அமைச்சர் சேகர்பாபு தலைமையிலான அறநிலையத்துறை செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமையாக குறிப்பிட்டு பேசினார்.
இதேபோல நேற்று தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியிருந்தார். அதில், கனவு ஆசிரியர் விருது பெற்ற 55 ஆசிரியர்களை பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுலா அழைத்து செல்வதையும், இதுவரை 236 மாணவர்கள், 92 ஆசிரியர்களை 6 நாடுகளுக்கு அழைத்து சென்ற பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகள் குறித்தும் அமைச்சர் அன்பில் மகேஷை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.