நெல்லையில் தனியார் பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழப்பு..1 – ஓபிஎஸ் அறிக்கை

Default Image

நெல்லையில் தனியார் பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழப்பு குறித்து அறிக்கை வெளியிட்ட ஓபிஎஸ்.

நேற்று நெல்லையில் எஸ்.என்.ஹைரோட்டில் பொருட்காட்சி திடல் அருகே  உள்ள தனியார் பள்ளியான சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியின் கழிப்பறை சுவர்  இடிந்து விழுந்ததில், 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்த 4 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நேற்று முன் தினம் திண்டுக்கல் மாவட்டம், பாச்சலூரில் உள்ள ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் தீயில் கருகிய நிலையில் 10 வயது சிறுமி மர்மமான முறையில் இறந்த துக்கம் ஆறுவதற்குள் நேற்று திருநெல்வேலியில் உள்ள தனியார் பள்ளியில் கழிவறைச் கவர் இடிந்து விழுந்ததில் மூன்று மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியும், நான்கு மாணவர்கள் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர் என்ற செய்தியும் என்னை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருநெல்வேலி பொருட்காட்சி திடல் அருகேயுள்ள சாஃப்டர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று காலை கழிவறைச் சுவர் இடிந்து விழுந்ததில், அப்பள்ளியில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்களான கே. அன்பழகன், டி.விஸ்வரஞ்சன் மற்றும் ஆறாம் வகுப்பு பயிலும் மாணவர் ஆர். சுதீஷ் ஆகிய மூன்று பேர் உயிரிழந்ததோடு, 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவன் ஷேக் அபுபக்கர் கித்தானி, ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவன் எம். இசக்கி` பிரகாஷ், எட்டாம் வகுப்பு பயிலும் மாணவன் எஸ். சஞ்சய் மற்றும் ஏழாம் வகுப்பு பயிலும் மாணவன் அப்துல்லா ஆகியோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த மாணவர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துவதோடு, அவர்களின் பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், சக மாணவர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன். படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேற்படி சம்பவம் தனியார் பள்ளியில் நிகழ்ந்திருந்தாலும், தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறைக்கும் இதில் பொறுப்பு உண்டு. ஏனெனில், தனியார் பள்ளிகளுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்குவது பள்ளிக் கல்வித் துறை தான். பள்ளிகளில் உள்ள கட்டடங்கள், வகுப்பறைகள் மற்றும் கழிவறைகள் நன்கு வலுவாக உள்ளனவா, ஆய்வகங்கள் முறையாக செயல்படுகிறதா, விளையாடுவதற்கு மைதானம் இருக்கிறதா என்பதை ஆராய்ந்துதான் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படுகிறது. பின்னர், குறிப்பிட்ட இடைவெளியில் பள்ளிகளின் உட்கட்டமைப்புகளை ஆய்வு செய்து, அதில் ஏதேனும் குறைபாடு இருந்தால் அதனை பள்ளி நிர்வாகத்திடம் எடுத்துரைத்து அதனை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற கட்டளையை பிறப்பிக்கும் அதிகாரமும் பள்ளிக் கல்வித் துறைக்கு உண்டு. ஆபத்தான நிலையில் உள்ள கட்டடங்களை சீரமைக்க வேண்டிய கடமை பள்ளி நிர்வாகத்திற்கும் உண்டு.

கொரோனா நோய்த் தொற்று காரணமாக பள்ளிகள் நீண்ட நாட்கள் மூடப்பட்ட நிலையையும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கனமழையையும் கருத்தில் கொண்டு பள்ளியின் கட்டடங்களை பள்ளி நிர்வாகம் தானாகவே ஆய்வு செய்து சீரமைத்திருக்க வேண்டும். ஆனால், அதை பள்ளி நிர்வாகம் செய்யத் தவறியதன் காரணமாக இந்த தூரதிர்ஷ்டவசமான சம்பவம் நடைபெற்றிருக்கிறது. பள்ளிக் கல்வித் துறையும் ஆய்வு செய்ய தவறிவிட்டது. இது பள்ளி நிர்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித் துறையின் அலட்சியப் போக்கையே காட்டுகிறது. இதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நேரத்தில், 2021-2022 ஆம் ஆண்டு இடைக்கால நிதிநிலை அறிக்கையுடன், திருத்திய நிதிநிலை அறிக்கையை ஒப்பிடும்போது 1,592 கோடி ரூபாய் குறைவாக ஒதுக்கப்பட்டு இருப்பதும்; 33,000 கோடி ரூபாயில் 31,000 கோடி ரூபாய் ஆசிரியர்களின் சம்பளத்திற்கு சென்றுவிடுகிறது என்றும், மீதி இருக்கிற 2,000 கோடி ரூபாயில் 45,000 பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் கூறி இருப்பதும் தான் என் நினைவிற்கு வருகிறது. நிதி நிலையைக் காரணம் காட்டி அரசுப் பள்ளிகளை சீரமைப்பதில் மெத்தனப் போக்கை அரசு கடைபிடிக்கக்கூடாது என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பழுதடைந்த நிலையில் உள்ள கட்டுமானங்கள் குறித்து உடனடியாக அறிக்கை பெற்று, அரசுப் பள்ளிகளில் பழுதடைந்த கட்டுமானங்களை விரைந்து சீர்செய்யவும், தனியார் பள்ளிகளில் பழுதடைந்த கட்டுமானங்களை உடனடியாக சீர்செய்ய பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தவும், மேற்படி விபத்திற்கு காரணமான பள்ளி நிர்வாகத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிற மாணவர்களுக்கு அரசு செலவில் உயரிய சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மேலும், உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கான நிவாரணம் மற்றும் படுகாயமடைந்தவர்களுக்கான நிவாரணம் போதுமானதாக இல்லை என்பதால், அதனை உயர்த்தி வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்