#BREAKING: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 3 தனிப்படை அமைப்பு!
பணமோசடி வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைப்பு.
கடந்த அதிமுக ஆட்சியில் தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. ரவீந்திரன், விஜய் நல்லதம்பி அளித்த புகாரில் ராஜேந்திர பாலாஜி மீது இரு வழக்குகள் பதியப்பட்டது.
இந்த இரு வழக்குகளில் முன்ஜாமீன் வழங்க கோரி ராஜேந்திர பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். புகார் அளித்த விஜய் நல்லதம்பி பணம் நோக்கில் அளித்த புகாரில் வழக்கு பதியப்பட்டுள்ளது என்று அவரது மனுவில் கூறியுள்ளார். இந்த வழக்கு விசாரணையின் போது, வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி பணமோசடி புகாரில் 23 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை நிராகரிக்கவேண்டும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, கே.டி. ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட குற்றச்சாட்டப்பட்டவர்களின் முன் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில், வேலை வாங்கி தருவதாக பணமோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைத்துள்ளது விருதுநகர் மாவட்ட காவல்துறை. ராஜேந்திர பாலாஜி திருச்சியில் இருப்பதாக தகவலறிந்த காவல்துறை, அவரை கைது செய்ய அங்கு ஒரு தனிப்படையை அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.