கன்னியாகுமரியில் ஒரே நாளில் உயிரிழந்த 3 பேர் – கொரோனா இல்லை
க ன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று உயிரிழந்த 3 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் ராஜக்கமங்கலம் துறை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் மரியஜான். இவருக்கு வயது 66 .இவர் கேரளாவில் மீன்பிடி தொழில் செய்து வந்த நிலையில் சொந்த ஊரான கன்னியாகுமரிக்கு திரும்பியுள்ளார். இதனால் கொரோனா அச்சம் காரணமாக இவர் வீட்டில் தனிபடுத்தப்பட்டிருந்தநிலையில் அவருக்கு தொடர்ந்து இருமல், காய்ச்சல் இருந்ததால் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டார். நேற்று திடீரென உயிரிழந்தார். இவர் இறந்த அதே வார்டில் 2 வயது ஆண் குழந்தை, 24 வயது இளைஞர் உயிரிழந்தனர்.ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்தது தொடர்பாக சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்தியது.
1.2 வயது குழந்தை பிறவி எலும்புநோய் காரணமாகவும்,
2.66 வயது மீனவர் சிறுநீரக நோய் காரணமாகவும்,
3.24 வயது இளைஞர் நிம்மோனியா தொற்றினால் குருதியில் ஏற்பட்ட நச்சுதன்மை காரணமாகவும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இவர்களது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் குடும்ப நலத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கையில்,கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று உயிரிழந்த 3 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.