சென்னையில் 11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.! 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது.!

Child Abuse in Chennai Villivakkam

சென்னை: வில்லிவாக்கம் பகுதியில் 11 வயது சிறுமிக்கு 6மாத காலமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட புகாரில் 2 சிறுவர்கள் , ஒரு தையல் கடைக்காரர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை வில்லிவாக்கம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 11 வயது சிறுமிக்கு உறவுக்கார சிறுவன், அவனது நண்பன் உட்பட மேலும் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மதுபோதைக்கு அடிமையான சிறுமியின் பெற்றோர்கள் சிறுமியை சரிவர கவனிக்கவில்லை என தெரிகிறது. இதனை பயன்படுத்திக்கொண்ட அந்த நபர்கள் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளனர்.

சிறுமியை பார்க்க வந்த உறவுக்கார பெண் சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது தெரிந்ததும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு தான் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்தது தெரியவந்துள்ளது. சுமார் 6 மாத காலம் தொடர்ந்து இந்த கொடூரம் நிகழ்ந்ததும் பின்னர் தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து, சென்னை வில்லிவாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து போக்ஸோ வழக்கு பதிவு செய்த வில்லிவாக்கம் போலீசார், முதற்கட்டமாக அப்பகுதியில் உள்ள குமார் எனும் டெய்லரை கைது செய்தனர். அதன்பின்னர், மேற்கொண்ட விசாரணையில் சிறுமியின் பெரியப்பா மகன் 16 வயது சிறுவனும்,அவனது நண்பனும் இச்சம்பவத்தில் ஈடுப்பட்டது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் அவர்களும் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் 11 வயது சிறுமிக்கு உறவுக்கார சிறுவன் மூலமாகவே 6 மாத காலமாக நேர்ந்த பாலியல் துயரம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது போக்ஸோ வழக்கின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா என விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்