விக்கிரவாண்டி பள்ளி குழந்தை உயிரிழப்பு! நள்ளிரவில் 3 பேர் கைது!
விக்கிரவாண்டி தனியார் பள்ளியில் சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் : விக்கிரவாண்டியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் எல்கேஜி பயின்று வந்த லியா லட்சுமி என்ற மூன்றரை வயது பெண் குழந்தை நேற்று வழக்கம் போல பள்ளிக்கு சென்றுள்ளார். மதிய இடைவெளி சமயத்தில் கழிவறை சென்ற குழந்தை, அங்கிருந்த செப்டிக் டேங்க் மீது எறியதாக கூறப்படுகிறது.
அந்த செப்டிக் டேங்க் இரும்பு மூடி துருப்பிடித்து இருந்துள்ளதால், சிறுமி லியா லட்சுமி தவறி செப்டிக் டேங்க் உள்ளே விழுந்துவிட்டார். இதனை அடுத்து சில நேரம் கழித்து லியாவை தேடிய ஆசிரியர்கள் செப்டிக் டேங்க் உள்ளே சிறுமி, தவறி விழுந்ததை அறிந்து லியாவை மீட்டு முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். ஆனால், குழந்தை லியா லட்சுமி உயிரிழந்துவிட்டார் என்ற செய்தியே சிறுமியின் பெற்றோருக்கு கிடைத்துள்ளது.
இதனை அடுத்து, பள்ளி நிர்வாகம் அலட்சியமாக செயல்பட்டதால் தனது குழந்தை உயிரிழந்தது எனக் கூறி குழந்தையின் தந்தை பழனிவேல் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பெயரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்த விக்கிரவாண்டி போலீசார், தனியார் பள்ளி தாளாளர் எமில்டா, பள்ளி முதல்வர் டொமில்லா மேரி, ஆசிரியர் ஏஞ்சல் ஆகியோரை நள்ளிரவில் கைது செய்தனர்.
பள்ளி கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்து பலியான சிறுமியின் பெற்றோருக்கு ரூ.3 லட்சம் நிவாரணமாக வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றே உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்த குழந்தை லியா லட்சுமியின் பெற்றோருக்கும், அவரது உறவினர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.