மேலும் 3 தேசிய பேரிடர் குழுக்கள் வருகை.. திருவள்ளூர் மாவட்டத்துக்கு ரெட் அலர்ட்!
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை பெய்து வருகிறது. இதனால், பார்க்கும் இடமெல்லாம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ள நிலையில், இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழல் மிக்ஜாம் புயல் தீவிர புயலாக வலுப்பெற்று உள்ளதால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என்றும் இன்று இரவுக்கு பிறகு படிப்படியாக மழை குறையும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தீவிர புயலாக மாறிய மிக்ஜாம் புயல் சென்னைக்கு கிழக்கே 90 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் புயல், மேலும் வலுப்பெற்று வடக்கு திசையில், தெற்கு ஆந்திரா பகுதிக்கு நகரக்கூடும் என்றும் நாளை நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கிறது எனவும் கூறப்பட்டுள்ளது.
மக்களே அலர்ட்: தீவிர புயலாக வலுப்பெற்றது மிக்ஜாம்.! சென்னையில் இருந்து 90 கிமீ..
இந்த நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்திற்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்று, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்ள 3 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் வருகின்றனர். அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு 3 குழுக்கள் வருகின்றன. தாம்பரம் பகுதியில் மீட்பு பணிகளை தீவிரப்படுத்த விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து 2 பேரிடர் மீட்பு குழுக்கள் வருகின்றனர்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஏற்கனவே 250 பேர் கொண்ட 10 குழுக்கள் உள்ள நிலையில், மேலும், 3 தேசிய பேரிடர் குழுக்கள் வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.