யாருக்கு அறிவில்லை? அமைச்சர் பி.டி.ஆர் vs அண்ணாமலை வார்த்தை போர்! 

3 மொழி கொள்கையை அறிவு இருப்பவர்கள் இதனை ஏற்றுக்கொள்வார்களா? என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதில் விமர்சனம் செய்துள்ளார்.

Minister Palanivel Thiyagarajan - BJP State president Annamalai

சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு வெளிப்படையாகவே முயற்சித்து வருகிறது. பிஎம் ஸ்ரீ திட்டத்தில் தமிழகம் இணையவில்லை அதனால் தான் தமிழகத்திற்கான நிதி ஒதுக்க முடியவில்லை என மத்திய  அமைச்சர்  வெளிப்படையாகவே கருத்து தெரிவித்து பரபரப்பை கிளப்பினார். மேலும், இதற்கு தமிழக அரசு ஒப்புக்கொண்டது எனவும் அவர் கூறி வருகிறார்.

இதனை மறுக்கும் திமுக எம்பிக்கள் மற்றும் மாநில திமுக அரசு, PM Shri திட்டமானது தேசிய கல்வி கொள்கையின் மும்மொழி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ளது என ஏற்க மறுக்கிறது. இதற்கு எதிராக மும்மொழி கொள்கையை ஆதரித்து பாஜக கையெழுத்து இயக்கம் ஒன்றையும் நடத்தி வருகிறது. இந்த இருமொழி கொள்கை – மும்மொழி கொள்கை விவகாரத்தில் திமுக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இடையே வார்த்தை மோதல் எழுந்துள்ளது .

அறிவு இருப்பவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?

இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், ” எங்குமே வெற்றிபெறாத ஒரு மாடலை கொண்டு வந்து, ஏற்கனவே வெற்றி பெற்று வரும் ஒரு மாடலை எடுத்துவிட்டு அதற்கு பதிலாக இதனை செயல்படுத்துங்கள் என சொல்வது எந்த வகையில் நியாயம்? அறிவு இருப்பவர்கள் இதனை ஏற்றுக்கொள்வார்களா?

1968-ஆம் ஆண்டு முதல் தேசிய கல்வி கொள்கை அமல்படுத்தப்பட்டது. அன்று இருந்த காங்கிரஸ் ஆட்சியில் பிரதமர் இந்திராகாந்தி இதனை செய்லபடுத்த முயற்சித்தார். அன்று முதல் இன்று வரை மும்மொழி கொள்கை என சொல்லி வருகின்றனர். சுமார்  57 வருடங்களாக முறையாக மும்மொழி கொள்கையை அமல்படுத்த முடியவில்லை.

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இருக்கிற பணவசதி, ஆசிரியர்கள் எண்ணிக்கையை வைத்துக்கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் சிறப்பாக கல்வி வழங்க வேண்டும் என்பதே பெரிய இலக்காக உள்ளது. இப்படியான சமயத்தில் 3வது மொழி எதற்கு என்று தெரியவில்லை.

நமது மாநில கல்வி வளர்ச்சி என்பது சிறப்பானதாக உள்ளது. தேசிய அளவில் கல்வி சராசரி எடுத்துக்கொண்டாலும், மற்ற மாநிலங்களின் கல்வி சராசரி எடுத்துக்கொண்டாலும் சரி தமிழ்நாட்டு கல்வி சாராசரி நன்றாகவே உள்ளது. அறிஞர் அண்ணா சொன்னது போல நமக்கு தமிழ், உலக அறிவுக்கு ஆங்கிலம்.

அவர்களுக்கு அதிகாரம் இல்லை

தமிழ்நாட்டில் மும்மொழியை அமல்படுத்துவது போல உ.பி, ம.பி, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் செயல்படுத்துங்கள். அங்கே  இன்னும் 2 மொழி கூட முறையாக அமல்படுத்தவில்லை. அங்கு 2 மொழி கொள்கையில் 2வது மொழியான ஆங்கிலம் ஒழுங்காக கற்று கொடுத்து முழுதாக அமல்படுத்தி இருந்தால், மூன்று மொழி கற்க வேண்டிய தேவையில்லை.  இதனை செய்யாமல் நம்மை மூன்று மொழி கொள்கைக்கு கட்டுப்படுத்துவது  ஜனநாயகத்திற்கு விரோதமானது. இதன் அடிப்படையே தவறு. சட்டப்படி திணிக்க அவர்களுக்கு அதிகாரம் இல்லை.

பல்வேறு மாநிலங்களில் இன்னும் எங்கும் இரு மொழி கொள்கை கூட  ஒழுங்கா கூட அமல்படுத்த முடியாதவர்கள், நம்மிடம் 3 மொழி கொள்கை அமல்படுத்த சொல்கிறார்கள். 2 மொழி கொள்கையில் சிறப்பாக செயல்படும் நம்மளை அவங்க அளவுக்கு கொண்டு வர நினைக்கிறார்களா என தெரியவில்லை என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுளளார்.

யாருக்கு அறிவில்லை?

இதற்கு பதில் அளிக்கும் விதமாக தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பிடிஆர் மகன் எங்கு படிக்கிறார்? அவர் இந்திய குடிமகனா அல்லது அமெரிக்க குடிமகனா? சும்மா நானும் பேசுவேன் என்றெல்லாம் பேசக்கூடாது.  அறிவுள்ளவர்கள் இரு மொழி கொள்கை படிக்கிறார்கள் என்றால், உங்கள் பிள்ளைகள் மூன்று மொழி சொல்லி கொடுக்கும் பள்ளியில் படிக்கிறார்கள் அப்படி என்றால் யாருக்கு அறிவில்லை?

எனக்கு தெரிந்து பிடிஆர் அவரது கண்ணாடி முன்னாடி நின்று பேசுகிறார் என்று நினைக்கிறேன். திமுக எம்பி, திமுக அமைச்சர்கள் குழந்தைகள் எங்கு படிக்கிறார்கள்? எங்களை பொறுத்தவரை அனைவருக்கும் சமகல்வி கிடைக்க வேண்டும். அரசு பள்ளி மாணவர்கள் 52 லட்சம் பேரும்,  தனியார் பள்ளி மாணவர்கள் 56 லட்சம் பேரும் சமமான கல்வி கிடைக்க வேண்டும். ஒரு பக்கம் 3 மொழி ,  ஒரு பக்கம் 2 மொழி என்பதை தான் சரி செய்ய வேண்டும் என அண்ணாமலை பேசியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்