விவசாயிகளுக்கு விரோதமான 3 அவசர சட்டங்களையும், மத்திய பா.ஜ.க. அரசு திரும்பப் பெறவேண்டும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,மக்களவையில் சர்ச்சைக்குரிய மூன்று விவசாய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மத்திய கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கும் அகாலி தளத்தை சேர்ந்த உணவுத்துறை அமைச்சர் ஹர்ஷிம்ரத் கவுர் பாதல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் பிளவு ஏற்படுகிற நிலை ஏற்பட்டுள்ளது .
கடந்த ஜுன் 5 ஆம் தேதி விவசாயத் துறை தொடர்பான 3 அவசரச் சட்டங்களை மத்திய அரசு பிறப்பித்தது. இதனை எதிர்த்து ஹரியானா மாநிலத்தில் கடந்த 10 ஆம் தேதி பாரதிய கிஷான் சங்கத்தின் சார்பாக மாபெரும் போராட்டம் நடந்தது. இதனையடுத்து பஞ்சாப், உத்தரப்பிரதேசம் மற்றும் தெலங்கானா மாநிலங்களிலும் கடந்த 14 ஆம் தேதி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
விவசாயிகளை அச்சுறுத்தும் வகையில் மத்திய அரசின் 3 அவசரச் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டன.உழவர் உற்பத்தி வர்த்தகம் மற்றும் வர்த்தக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) அவசரச் சட்டத்தின்படி, பயிர் அறுவடை முடிந்ததும் தானியங்களை எங்கு வேண்டுமானாலும், எந்த வியாபாரிக்கும் விவசாயி விற்கலாம். அவர்கள் பகுதியில் உள்ள விவசாய உற்பத்தி மற்றும் மார்க்கெட் கமிட்டியில்தான் விற்கவேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை. ‘ஒரு நாடு, ஒரு சந்தை’ என்ற வகையில், இதனை அரசு முன்னெடுத்துச் செல்கிறது.
இரண்டாவதாக விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் குறித்த விவசாயிகள் ( அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்த சட்டத்தின்படி, தனது பயிரின் தரத்துக்கேற்ப பயிர்களை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தில் விவசாயி கையெழுத்திட வேண்டும். விவசாயிகளின் இழப்பை இது குறைக்கும் என்று நம்பப்படுகிறது.
மூன்றாவதாக 1955 ஆம் ஆண்டு அத்தியாவசியப் பொருட்கள் சட்டத் திருத்தப்படி பணக்காரர்களும் வணிகர்களும் முன்பு பயிர்களை மலிவு விலையில் வாங்கி, அவற்றை அதிக அளவு சேமித்து, கள்ளச் சந்தையில் விற்று வந்தனர். இதனைத் தடுக்க 1955 ஆம் ஆண்டு அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படுகிறது. ஆனால், புதிய திருத்தத்தின்படி, தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சமையல் எண்ணெய் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
இந்த 3 அவசரச் சட்டங்கள் குறித்து பாரதிய கிஷான் சங்கத்தின் தேசிய செய்தி தொடர்பாளர் ராகேஷ் திகாயத் கூறும்போது, ”குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிப்பதை அவசரச் சட்டங்கள் பாதிக்கும்” என்று கூறியுள்ளார். மேலும் அவர். ”குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் குறித்தும் அரசு சட்டம் இயற்ற வேண்டும். குறைந்தபட்ச விலை நிர்ணய முறை இருந்தால் மட்டுமே, இடைத்தரகர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களால் விவசாயிகள் பாதிக்கப்படுவது நிறுத்தப்படும். விவசாயிகளின் வருவாய் அதிகரிக்கும். குறைந்தபட்ச ஆதரவு விலைக்குக் குறைவாக பயிர்களை வாங்கினால், கிரிமினல் குற்றமாக கருதவேண்டும்” என்று கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
நாடு முழுவதும் மூன்று அவசர சட்டங்களை விவசாயிகள் எதிர்ப்பதற்கு நியாயமான காரணங்கள் இருக்கின்றன. விவசாயம் தொடர்பான 3 அவசரச் சட்டங்களால் தனியார் நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் விவசாயிகள் செல்லக்கூடிய அபாயம் உள்ளது. சட்டக் கட்டுப்பாடு, சந்தை சுதந்திரம், இறக்குமதி-ஏற்றுமதி ஆகியவை விவசாயிகளின் நலன் சார்ந்தவைகளாக இருக்காது. உலக வர்த்தக அமைப்பின் கொள்கைகளால் ஏற்கனவே இந்திய விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
1943-44 ஆம் ஆண்டுகளில் கிழக்கிந்திய கம்பெனி உணவு தானியங்களை பதுக்கி வைத்ததால், வங்காளத்தில் ஏற்பட்ட கடும் பஞ்சத்தால் 40 லட்சம் பேர் பட்டினி கிடந்து இறந்து போனார்கள். விவசாய உற்பத்தி மற்றும் மார்க்கெட் கமிட்டியை சார்ந்துள்ள விவசாயிகள், மத்திய அரசின் 3 அவசரச் சட்டங்களால் கோபம் அடைந்துள்ளனர். புதிய முறை அமல்படுத்தப்பட்டால், குறைந்தபட்ச விலை நிர்ணய முறை முடிவுக்கு வரும். இது குறித்து அவசரச் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை என்றாலும், குறைந்தபட்ச விலை நிர்ணயத்தின் அடிப்படையிலான கொள்முதல் முறை ரத்து செய்யப்படும்.
உயர்மட்டக் கமிட்டியின் பரிந்துரையின்படி இத்தகைய அவசரச் சட்டங்களை மத்திய அரசு அமல்படுத்துவதில் உள்நோக்கம் இருப்பதாக விவசாய சங்கத் தலைவர்கள் நம்புகின்றனர்.இந்த அவசரச் சட்டங்களால் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மண்டிகளில் மட்டும் 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள். அதோடு, மண்டிகளில் இருந்து மாநில அரசுகளுக்குக் கிடைக்கும் வருவாயும் பாதிக்கும்.
இது குறித்து விவசாயத் துறை நிபுணர் தேவேந்திர சர்மா கூறும்போது, ”விவசாயத் துறையில் வெளிச்சந்தைக் கொள்கையை செயல்படுத்த நாம் முயற்சிக்கிறோம். அமெரிக்கா மற்றும் ஐரோப்பியாவை பின்பற்ற நாம் முயற்சிக்கின்றோம். விவசாயத் துறையில் வெளிச்சந்தைக் கொள்கை என்பது அமெரிக்காவில் தோல்வியடைந்துவிட்டது.
அமெரிக்காவில் தோல்வியடைந்த நிலையில், இந்தியாவில் மட்டும் எவ்வாறு சாத்தியமாகும்? மேற்கத்திய நாடுகளும் விவசாயத்தில் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றன. விவசாயிகளைப் பாதுகாக்க அரசாங்கத்தால் மட்டுமே முடியும். வெளிச்சந்தைக் கொள்கை இந்திய விவசாய முறைக்கு ஒத்துவராது.
இந்தியாவில் 86 சதவீத விவசாயிகள் 2 ஹெக்டேர் நிலம் வைத்துள்ளனர். இவர்கள் தங்கள் விளைச்சலை எங்கு வேண்டுமானாலும் கொண்டு சென்று விற்க முடியாது. பிறகு யாருக்காக இந்த கொள்கை? நாட்டில் உள்ள மண்டிகளை முடிவுக்கு கொண்டு வருவதுதான் அரசு பிறப்பித்துள்ள அவசரச் சட்டங்களின் நோக்கமாக உள்ளது.
மண்டிகள் முடிவுக்கு வந்துவிட்டால், குறைந்தபட்ச விலை நிர்ணய முறையும் முடிவுக்கு வந்துவிடும். கடந்த சில ஆண்டுகளாகவே குறைந்தபட்ச விலை நிர்ணய முறையை ரத்து செய்யும் முயற்சி நடந்து வருகிறது. சேமிப்பு வரம்புகளை நீக்கியதன் மூலம் பதுக்கலை சட்டப்பூர்வமாக்கியுள்ளது மத்திய அரசு. யார், எவ்வளவு சேமித்து வைத்திருக்கிறார்கள் என்று மத்திய அரசுக்கு இப்போது தெரியாது.
‘ஒரு நாடு, ஒரு சந்தை’ என்று கூறும் மத்திய அரசு, விவசாய உற்பத்தி மற்றும் மார்க்கெட் கமிட்டியும் செயல்படும், வெளிச்சந்தையும் செயல்படும் என்று கூறுவது முரண்பாடு இல்லையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.கடந்த 2014 தேர்தலின்போது விவசாயிகளின் விலை பொருளுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையின்படி நியாயமான விலை வழங்கப்படும், விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக கூட்டுவேன் என்று வாக்குறுதி கொடுத்து மோடி ஆட்சிக்கு வந்தார். ஆனால் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. விவசாயிகளின் வாழ்வாதாரம் நாளுக்கு நாள் கடுமையாக பாதிக்கபப்ட்டு வருகிறது. விவசாயிகள் தற்கொலை அதிகரித்துவருகிறது. இந்நிலையில் விவசாயிகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் நிலையில் மூன்று அவசர சட்டங்களை பிறப்பித்ததால் நாடு முழுவதும் விவசாயிகள் பாஜக ஆட்சியை எதிர்த்து போராடி வருகிறார்கள்.எனவே, விவசாயிகளுக்கு விரோதமான மூன்று அவசர சட்டங்களையும், மத்திய பா.ஜ.க. அரசு திரும்பப் பெறவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…