தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு..கொளுத்தப்போகும் வெயில் – வானிலை மையம்

தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்.
தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 லிருந்து 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோடை காலம் தொடங்கி இருப்பதால், ஏற்கனவே பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் மக்களை வாட்டிவதைக்கிறது. இந்த சமயத்தில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெப்பநிலை அதிகரிப்பதால் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் வெயில் கொளுத்த வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் மழைக்கு வாய்ப்பில்லை என கூறியுள்ளது. இதனிடையே, வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.