3 சிறுவர்கள் கடலில் மூழ்கி உயிரிழப்பு.! அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்..!
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே நவலடி பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் பங்கேற்க வந்த பள்ளி சிறுவர்கள் 4 பேர் நேற்று இரவு அருகில் உள்ள கடலில் குளிக்க சென்றுள்ளனர்.
அப்போது கடல் அலை இழுத்து சென்றதில் ஆகாஷ், ராகுல், முகேஷ் ஆகிய மூவரும் கடலில் மூழ்கியுள்ளனர். மீதம் உள்ள ஒரு மாணவன் மட்டும் கரை சேர்ந்துள்ளான். கடலில் இழுத்து செல்லப்பட்ட மீதம் உள்ள சிறுவர்களை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டது.
கடலோர காவல்படையினர் மற்றும் மீனவர்கள் இரவு முழுவதும் தேடிய நிலையில், இன்று காலை 3 சிறுவர்களின் உடல்களும் கரை ஒதுங்கின. இந்நிலையில், அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் “திருநெல்வேலி, ராதாபுரம் தொகுதி, நாவலடியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் ஆகாஷ், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ராகுல், எட்டாம் வகுப்பு படிக்கும் முகேஷ் ஆகிய மூவரும் 15 அன்று கடலில் குளிக்க சென்ற போது, நீரில் மூழ்கி இறந்த செய்தி அறிந்து மிகுந்த மன வேதனையும், வருத்தமும் அடைந்தேன்.”
“பலியான மூன்று மாணவர்களின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். மகன்களை இழந்து தவிக்கும் மூவரின் குடும்பங்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.” என்று கூறியுள்ளார்.