காப்பகத்தில் 3 குழந்தைகள் உயிரிழப்பு : மூடப்படும் காப்பகம்..! அமைச்சர் கீதாஜீவன் அதிரடி உத்தரவு..!
3 சிறுவர்கள் உயிரிழந்த நிலையில், அமைச்சர் கீதா ஜீவன் அவர்கள், காப்பகத்தை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
நேற்று திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி அருகே ஆதரவற்ற குழந்தைகளுக்கான காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட சிறுவர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சில குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக 5 குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், காவல்துறையினரும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், அமைச்சர் கீதா ஜீவன் அவர்கள், காப்பகத்தை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும், திமுக சார்பாக உயிரிழந்த 3 சிறுவர்களுக்கு தலா ரூ.1 லட்சம்,பாதிக்கப்பட்ட 11 சிறுவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரண நிதியை வழங்கினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கீதாஜீவன் அவர்கள், நிர்வாகத்தின் மெத்தனப்போக்கால் தான் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. காப்பகம் மோசமான நிலையில் இருப்பதால் விவேகானந்தா காப்பகம் மூடப்படுவதாகவும், காப்பகத்தில் உள்ள குழந்தைகள் அரசு காப்பகத்திற்கு மாற்றப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.