ஆளுநருக்கு 3 வாய்ப்புகள்..குடியரசு தலைவர் தான் தலைவர் – ஆளுநர் மாளிகை ட்வீட்!
மசோதா மீது முடிவெடுக்க ஆளுநருக்கு 3 வாய்ப்புகள் உள்ளன என தமிழ்நாடு ஆளுநர் மாளிகை ட்வீட்.
மசோதாக்கள் நிலுவையில் இருந்தால், அது நிராகரிப்பதாக தான் அர்த்தம் என்று ஆளுநர் பேசியது சர்ச்சையானது. இதற்க்கு ஆளுநரை திரும்பப்பெறுவது தான் அவரின் பதவிக்கு மதிப்பாகும் என முதல்வர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், மசோதா குறித்தான ஆளுநர் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தமிழ்நாடு ஆளுநர் மாளிகை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளது.
ஆளுநருக்கு 3 வாய்ப்புகள்:
அதில், மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதா மீது முடிவெடுக்க அரசியலமைப்பின் 200வது விதியின்படி ஆளுநருக்கு 3 வாய்ப்புகள் உள்ளன. முதலாவதாக மசோதா சரியாக இருந்தால் ஒப்புதல் தரலாம். இரண்டாவது, மசோதா சரியில்லை என்றால் நிறுத்தி வைக்கலாம். அது கிட்டத்தட்ட நிராகரிப்பதாகவே அர்த்தம். இதை உச்சநீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளில் உறுதிப்படுத்தி உள்ளது.
மூன்றாவது முடிவு:
மூன்றாவது, மசோதா மீதான முடிவை எடுக்க குடியரசு தலைவருக்கு அதை அனுப்பி வைக்கலாம். இதற்கு காரணம், மத்திய அரசு இயற்றியுள்ள சட்டத்திற்கு இணையாக ஒரு மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு இருந்தால், அது குறித்த முடிவை தான் எடுக்காமல் அதை இறுதி செய்வது குடியரசு தலைவர் என்பதால் அதை அவரது பார்வைக்கு ஆளுநர் அனுப்பி வைக்கிறார். குடியரசு தலைவர் அத்தகைய மசோதா மீது முடிவெடுக்க இரண்டு வாய்ப்புகளை பயன்படுத்தலாம்.
ஆளுநரால் நிறுத்த முடியாது:
ஒன்று அவர் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவார். இரண்டாவதாக அதை நிறுத்தி வைப்பார். விதிவிலக்காக இரண்டு வித மசோதாவை ஆளுநரால் நிறுத்தி வைக்க முடியாது. ஒன்று அன்றாட செலவினம் தொடர்பான பண மசோதா. 2வது சட்டப்பேரவை அதன் வரம்புக்கு உட்படாத மசோதாவை நிறைவேற்றியதாக ஆளுநர் கருதினால், தமது கருத்துக்களுடன் அந்த மசோதாவை சபாநாயகருக்கு திருப்பி அனுப்பலாம். அந்த மசோதா மறுபரிசீலனை செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டு மீண்டும் ஆளுநரின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும். அதுதான் ஆளுநரின் அரசியலமைப்பு நிலைப்பாடு.
குடியரசு தலைவர் தான் தலைவர்:
மேலும், அரசியல் ரீதியாக மத்தியிலும் மாநிலத்திலும் வெவ்வேறு கட்சிகள் ஆட்சி செய்யும்போது ஆளுநர் பதவி வகிப்பவர், அரசியல் ரீதியாக செயல்படுகிறாரோ என்ற பார்வை இருக்கும். அரசியலமைப்பின்படி ஆளுநரை நியமிப்பது குடியரசு தலைவர். அந்த வகையில் குடியரசு தலைவர் தான் ஆளுநரின் தலைவர். இதை அரசியலமைப்பு தெளிவுபடுத்தியுள்ளது. எனவே இதில் எந்த பிரச்சனையும் எழவில்லை. உங்களுடைய கடமையை நீங்கள் சரியாக ஆற்ற வேண்டும். அவ்வளவுதான் என ஆளுநர் ரவி பதிலளித்தார் என பதிவிடப்பட்டுள்ளது.