தமிழகத்துக்கு 3.65 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் வருகை!
- தமிழகத்திற்கு 3.65 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசி வருகை.
- விரைவில் மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படும் என தகவல்.
தமிழகம் முழுவதிலும் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு சற்றே குறைய தொடங்கியுள்ளது. இந்நிலையில், மக்கள் தங்களைப் கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு அடைந்துள்ளதால், பலரும் தற்போது தடுப்பூசி போட ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனால் தமிழகத்தின் பல இடங்களிலும் கடந்த சில நாட்களாக தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனையடுத்து சில மாவட்டங்களில் தடுப்பூசி போடுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று தமிழகத்திற்கு 85 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகள் வந்த நிலையில், தற்போது மத்திய அரசிடமிருந்து தமிழகத்துக்கு 3.65 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளது.
நேற்று வந்தடைந்த கோவாக்சின் தடுப்பூசிகள் மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டு வரும் நிலையில், தற்பொழுது வந்தடைந்த கோவிஷீல்ட் தடுப்பூசிகள் விரைவில் மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.