3 ஆயிரம் முதியோர் வாழ்வை முடக்கிய ‘சுபிக்சா சுப்பிரமணியன்’- பணம் கட்டி ஏமாந்தவர்களில் 90 பேர் உயிரிழப்பு..!
ஓய்வூதிய பணத்தை மொத்தமாக வாங்கி மோசடி செய்து, 3 ஆயிரம் முதியவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினரின் வாழ்க்கையை சுபிக்சா சுப்பிரமணியன் அழித்து இருக்கிறார் என்று பாதிக்கப்பட்டவர்கள் கூறியுள்ளனர்.
தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, குஜராத், டெல்லி, மகாராஷ்டிரா உட்பட பல மாநிலங்களில் ‘சுபிக்சா’ என்ற சூப்பர் மார்க்கெட் நிறுவனம் 1997-ல் தொடங்கப்பட்டு மிகவும் பிரபலமாக செயல்பட்டு வந்தது. சென்னை அடையாறைச் சேர்ந்த சுப்பிரமணியன் (50) இதை நடத்தி வந்தார். ‘சுபிக்சா சுப்பிரமணியன்’ என்றால் அனைவருக்கும் தெரியும் வகையில் மிகவும் பிரபலமாக இருந்தார். சூப்பர் மார்க்கெட்டை போல விஸ்வபிரியா பைனான்ஸ் சர்வீஸ் மற்றும் விஸ்வபிரியா பைனான்ஸ் செக்யூரிட்டி என்ற பெயர்களில் நிதி நிறுவனங்களையும் சுப்பிரமணியன் நடத்தி வந்தார்.
தனது நிறுவனத்தில் பொதுமக்களை பங்குதாரர்களாக சேர்ப்பதாகக் கூறி, பொதுமக்களிடம் இருந்து பணம் வசூலித்தார். ஆனால் முதலீடு செய்தவர் களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்காமல் சுப்பிரமணியன் ஏமாற்றி விட்டார்.
பொதுமக்களிடம் இருந்து ரூ.150 கோடி அளவுக்கு மோசடி செய்ததாக சுப்பிரமணியன் மீது சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் 2015-ல் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனர். ஆனால் சில நாட்களில் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். பொதுமக்களை ஏமாற்றிய சுப்பிரமணியன் தனது நிறுவனத்தின் பெயரில் 13 வங்கிகளில் ரூ.700 கோடி அளவுக்கு கடன் வாங்கி மோசடி செய்துவிட்டதாக மீண்டும் ஒரு புகார் எழுந்தது. இதுகுறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி கடந்த மார்ச் 1-ம் தேதி சுப்பிரமணியனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விஸ்வபிரியா நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து கோடிக்கணக்கில் பணத்தை இழந்தவர்கள் ‘விஸ்வபிரியா நிதி நிறுவன முதலீட்டாளர்கள் நலச்சங்கம்’ என்ற பெயரில் அமைப்பு ஒன்றை தொடங்கியுள்ளனர்.
இதன் துணைத் தலைவர் ஷியாமளா சாரதி கூறியதாவது: “விஸ்வபிரியா நிதி நிறுவனத்தில் சுமார் 4 ஆயிரம் பேர் முதலீடு செய்துள்ளனர். இதில் 3 ஆயிரம் பேர் முதியவர்கள். 60 முதல் 90 வயதுள்ள நபர்கள்தான் அதிகம். பணியில் இருந்து ஓய்வுபெற்றவர்கள் பிஎப், கிராஜிவ்டி உட்பட ஓய்வூதிய பணத்தை முழுவதுமாக கட்டியுள்ளனர்.
இந்த சங்கத்தின் தலைவராக இருக்கும் சங்கர் தனது வாழ்நாள் முழுவதும் சேர்த்த ரூ.1 கோடியே 50 லட்சம் பணத்தை கட்டியிருக்கிறார். சுப்பிரமணியன் ஏமாற்றியதால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டு இருக்கிறார். விஸ்வபிரியா நிறுவனத்தில் பணம் கட்டிய முதியவர்களில் சுமார் 90 பேர் இறந்து விட்டனர். இதில் 40 பேர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளனர். சுப்பிரமணியத்தால் சுமார் 3 ஆயிரம் முதியவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் வாழ்க்கையை இழந்து கஷ்டப்படுகிறார்கள்.
விஜய்மல்லையா, நீரவ் மோடி போன்ற தொழில் அதிபர்கள் வங்கிப்ப ணத்தை ஏமாற்றினார்கள். ஆனால், சுப்பிரமணியன் எங்களைப் போன்ற முதியவர்களிடம் இருந்து கோடிகளில் பணத்தை பெற்று ஏமாற்றியிருக்கிறார். முதியவர்களை ஏமாற்றிய பாவம் சுப்பிரமணியனைச் சும்மா விடாது. முதியவர்களுக்கு பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்தால், அவர்களும் விரை வில் இறந்துவிடுவார்கள்.
பின்னர், பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டியதில்லை என்று சுப்பிரமணியன் செயல்படுகிறார். அது நடக்காது. சுப்பிரமணியனை ஜாமீனில் வெளியேவிட்டால் இன்னும் பல ஆயிரம் பேரிடம் மோசடி செய்வார். அவரை ஆயுள்காலம் முடியும்வரை சிறையில் அடைக்க வேண்டும். மேலும், இந் நிறுவன ஏஜெண்டுகளையும் வழக்கில் சேர்த்து, கைது செய்ய வேண்டும்.
சுப்பிரமணியன் வழக்கறிஞருக்கு படித்ததாகக் கூறி பார் கவுன்சிலில் பதிவு செய்து, தனது வழக்கில் அவரே வாதாடவும் செய்கிறார். எங்களிடம் இருந்து மோசடி செய்த பணத்தை வைத்து 49 நிறுவனங்களை வெவ்வேறு பெயர்களில் சுப்பிரமணியன் நடத்தி வருகிறார். அந்த நிறுவனங்களின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுப்பிரமணியனின் சொத்துக்களை விரைவில் பறிமுதல் செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க நீதிமன்றமும் அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், சுப்பிரமணியசாமி எம்பி ஆகியோரிடமும் மனு கொடுத்து இருக்கிறோம்” என்றார்.