ரூ.50 கோடி வரி ஏய்ப்பு? அரசு ஒப்பந்ததாரர் அலுவலகத்தில் 2வது நாளாக வருமான வரி சோதனை!
அரசு ஒப்பந்ததாரர் பாண்டித்துரை அலுவலகம் உள்பட 5 இடங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை.
புதுக்கோட்டை பெரியார் நகரில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் பாண்டிதுரையின் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் சோதனை நடத்தினர். எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான பாண்டித்துரை அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. அதிமுக ஆட்சி காலத்தில் இபிஎஸ் ஆதரவாளரான பாண்டித்துரை பல்வேறு ஒப்பந்தங்களை பெற்றிருந்தார் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது.
நெடுஞ்சாலை ஒப்பந்தங்களை பெற்று பல்வேறு முறைகேடு செய்ததாக பாண்டித்துரை மீது புகார் எழுந்ததை அடுத்து, வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சுமார் ரூ.50 கோடிக்கு வரி ஏய்ப்பு நடைபெற்று உள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த ஆட்சி காலத்தில் கிட்டத்தட்ட 5 ஆயிரம் கோடி மேலாக பணிகளை மேற்கொண்டதாகவும் தகவல் கூறப்படுகிறது.
இந்த நிலையில், புதுக்கோட்டை பெரியார் நகரில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் பாண்டித்துரை அலுவலகம் உள்பட 5 இடங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பாண்டித்துரை மேலாளர் பீட்டர், திருவேங்கைவாசலில் உள்ள வீடு, சிப்காட்டில் உள்ள 2 தொழிற்சாலைகளிலும் நேற்று முதல் தொடர்ந்து ரெய்டு நடைபெற்று வருகிறது.