தமிழ்நாட்டில் 25 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் – அமைச்சர் அறிவிப்பு
தமிழகத்தில் புதிதாக 25 நகர்ப்புற சுகாதார மையங்களை அமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது என அமைச்சர் தகவல்.
தமிழ்நாட்டில் மத்திய அரசின் சார்பில் புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இன்று சட்டமன்றத்தில் பேசிய அவர், தமிழகத்தில் புதிதாக 25 நகர்ப்புற சுகாதார மையங்களை அமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது. 30,000 மக்கள் தொகைக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க விதி உள்ளது. ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் 2 சுகாதார மையங்களுக்கு இடையே 8 கிமீ மேல் குறைந்தபட்சம் இடைவெளி அவசியம்.
மேலும், மக்கள் தொகை, இடைவெளி ஆகிய விதிகளை கருத்தில் கொண்டு தமிழகத்தில் 25 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் அறிவித்தார். தமிழகத்தில் தொலைதூர கிராமங்களில் மருத்துவ வசதியை மக்களின் இருப்பிடங்களுக்கே சென்று வழங்குவதற்கு ஏதுவாக, 389 மருத்துவ வாகனங்கள் இயக்கப்படுவதாகவும் சட்டப்பேரவையில் துறைவாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் தெரிவித்தார்.