தமிழகத்தில் மேலும் ஒருவர் பலி..இன்று ஒரே நாளில் 231 பேருக்கு கொரோனா.!
தமிழகத்தில் மேலும் 231 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2757 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று மேலும் 231 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே 2526 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 2757 ஆக அதிகரித்துள்ளது. இதில் இன்று சென்னையில் மட்டும் 174 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் 1,257 ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இன்று மேலும் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அனுமதிக்கப்பட்ட 76 வயதுடைய பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழப்பின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.
இதையடுத்து, இன்று 29 பேர் வைரஸில் இருந்து மீண்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,341 ஆக உள்ளது. வீட்டு கண்காணிப்பில் 35,418 பேர் இருக்கின்றார்கள் என்றும் அரசு கண்காணிப்பில் 40 பேர் உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் இன்று ஒரே நாளில் 10,127 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 1,39,490 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. தற்போது கொரோனா வார்டில் 1,383 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.