மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மூலம் 22,000 பேருக்கு வேலை – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை..!
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ‘என் மண், என் மக்கள்’ என்னும் பெயரில் கடந்த ஜூலை 28-ஆம் தேதி முதல் பாத யாத்திரைப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இன்றைய மதுரை கிழக்கு மற்றும் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ நிகழ்வு நடைபெற்றது.
இதுகுறித்து மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர், இன்றைய ‘என் மண், என் மக்கள்’ பயணத்தில், மதுரை கிழக்கு மற்றும் வடக்கு சட்டமன்றத் தொகுதியில், மாபெரும் மக்கள் கூட்டத்திற்கு நடுவே வெகு சிறப்பாக நடந்தது.
பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் ஒன்பதாண்டு கால நல்லாட்சியில், ரூபாய் 10,76,000 கோடி அளவுக்கு மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளன. 15 லட்சம் பேர் பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் பலனடைந்துள்ளார்கள். 57 லட்சம் பேர், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிப்பறை வசதி பெற்றுள்ளார்கள்.
உயிர் காப்பீடு திட்டம், மருத்துவக் காப்பீடு திட்டம், பயிர் காப்பீடு திட்டம், ஓய்வூதிய திட்டம், செல்வமகள் சேமிப்பு திட்டம், வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், 2,02,000 கோடி ரூபாய் முத்ரா கடனுதவி திட்டம் என விவசாயிகள், மகளிர், இளைஞர்கள், தொழில் முனைவோர்கள் என அனைத்துத் தரப்பு பொதுமக்களும் மத்திய அரசின் நலத்திட்டங்களால் பயனடைந்துள்ளனர்.
மத்திய அரசால் விருதுநகரில் ஜவுளிப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. முழு தென்னிந்தியாவுக்குமான மதுரை எய்ம்ஸ் கல்லூரி, 2,600 கோடி ரூபாய் நிதியில் கட்டப்பட்டு வருகிறது. 2026 ஆம் ஆண்டு மே மாதம், மதுரை எய்ம்ஸ் முழு பயன்பாட்டுக்கு வரும். 22,000 பேருக்கு மதுரை எய்ம்ஸ் மூலம் நேரடியான மற்றும் மறைமுகமான வேலை வாய்ப்பு வரும்.
1967 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக, பல முறை மத்திய அரசில் பசையான அமைச்சர் பதவிகள் வகித்தும், ஒரு முறை கூட எய்ம்ஸ் கொண்டு வருவதைப் பற்றி யோசிக்கவில்லை. ஒரு ஆண்டில் மகனும் மருமகனும் 30,000 கோடி ரூபாய் ஊழல் செய்து சம்பாதித்துள்ளனர்.
மக்களுக்குத் தேவையான பணிகளைச் செய்யாமல், கொள்ளையடித்த பணத்தைக் கொண்டு கோபாலபுரம் குடும்பம் மட்டும் வாழ வேண்டும் என்று திமுக செயல்படுகிறது. தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றாமல் மக்களை தவிக்க விடுகிறது. நெசவாளர்களுக்கென்று ஒரு வாக்குறுதியைக் கூட நிறைவேற்றவில்லை. தன் குடும்ப நலனை மட்டுமே நோக்கமாக திமுக கொண்டிருக்கிறது.
மதுரை கிழக்கு மற்றும் வடக்கு தொகுதியில் நடக்கும் தவறுகள்தான் தமிழகம் முழுவதும் திமுக ஆட்சியில் நடந்து கொண்டிருக்கிறது. அமைச்சர் மூர்த்தி, பத்திரப்பதிவு துறையில் செய்யாத ஊழல் இல்லை. தன் மகனுக்குப் பல நூறு கோடி செலவில் கல்யாணம் செய்து வைத்ததை மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
வரும் பாராளுமன்றத் தேர்தலில், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க, தமிழகத்தின் நாற்பது தொகுதியிலும் ஊழல் திமுக காங்கிரஸ் கூட்டணியைத் தோற்கடிப்போம். ஊழல், குடும்ப, சந்தர்ப்பவாத கூட்டணிக்குப் பாடம் புகட்டுவோம் என்று தெரிவித்துள்ளார்.