ஒரே நாளில் 20 செ.மீ மழை பெய்யும்., பிரதீப் ஜான் கொடுத்த ‘முக்கிய’ அப்டேட்.!
வரும் அக்டோபர் 16, 17ஆகிய தேதிகளில் சென்னை அல்லது அதன் சுற்றுவட்டாரத்தில் குறிப்பிட்ட பகுதியில் ஒரே நாளில் 20செ.மீ மழை பெய்ய வாய்ப்புள்ளது என தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழநாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்கியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று காலை 5.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு பகுதியானது வங்கக்கடலில் உருவானது என்றும், இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும் என்றும் அதனால் சென்னை முதல் புதுச்சேரி வரையிலான கடற்கரை பகுதியில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது . ஏற்கனவே தமிழக அரசு சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கனமழை முன்னெச்செரிக்கை தொடர்பான அறிவிப்புகள் சென்றடைந்துவிட்டன. தற்போது தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.
இந்த வடகிழக்கு பருவமழை குறித்து தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தனியார் செய்தி நிறுவனத்திற்கு தற்போது பேட்டியளித்துள்ளார். அதில், கனமழை தொடர்பான பல்வேறு தகவல்களை அதில் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை என்பது அக்டோபர் 1ஆம் தேதியே தொடங்கிவிட்டது என்று குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், ” தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 1ஆம் தேதியே துவங்கிவிட்டது. இந்த பருவமழை டிசம்பர் 31வரையில் இருக்கும். மொத்தமாக 440 மில்லி மீட்டர் மழை பெய்யும். தற்போது வரையில் 100 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது வடகிழக்கு பருவமழை அளவில் 25 சதவீதமாகும்.
வரும் நாட்களில் கடலோர மாவட்ட பகுதியில் மேலடுக்கு சுழற்சியானது வலுவடைந்து அக்டோபர் 16, 17ஆம் தேதி கனமழை பெய்யும் என்றும் அந்த சமயம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா என்பது அப்போது தான் தெரியவரும். இன்று காலை வரையில் கடலூர் பகுதியில் 5 செமீ மழை பெய்துள்ளது. சென்னையில் பொதுவாக 5 செமீ மழையளவு பதிவாகியுள்ளது. மைலாப்பூரில் மட்டும் 7 செமீ மழை பதிவாகியுள்ளது.
காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இரவு நேரங்களில் அதிகளவு மழை பெய்யக்கூடும். 7 செ.மீ முதல் 10 செ.மீ வரை மழை பெய்யக்கூடும். அக்டோபர் 16, 17 ஆகிய தேதிகளில் சென்னை, கடலூர் , விழுப்புரம், மரக்காணம், சென்னை வரையில் அநேக இடங்களில் கனமழை பெய்யக்கூடும். அதில் குறிப்பிட்ட சில இடங்களில் ஒரே நாளில் 20 செமீ வரையில் மழை பெய்வதற்கும் வாய்ப்புகள் உள்ளது.
இது வடகிழக்கு பருவமழையின் முதல் பெருமழை தான் அதனால் பயப்பட தேவையில்லை. கடந்த வருடம் மிக்ஜாம் புயல் சென்னை வந்து அடுத்து தூத்துக்குடி , நெல்லை பகுதியில் தான கடைசி பெருமழை பெய்தது. வரக்கூடிய நாட்களில் காற்றழுத்த தாழ்வு நிலையானது தெற்கு ஆந்திரா நோக்கி நகரும்.
மீனவர்களுக்கு ஏற்கனவே, ஒக்டோபர் 14(இன்று) முதல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அக்டோபர் 15, 16, 17, 18 ஆகிய தேதிகளில் கடல்சீற்றம் இருக்கும்.” என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.