டிசம்பர் 31-க்குள் 2000 “அம்மா மினி கிளினிக்குகள்” திறக்கப்படும் – முதல்வர் அறிவிப்பு
தமிழகம் முழுவதும் டிசம்பர் 31-க்குள் 2000 மினி கிளினிக்குகள் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
ஏழை எளிய மக்களை தேடி சென்று மருத்துவ சேவை அளிக்கும் வகையில், அம்மா மினி கிளினிக் கொண்டுவரப்படும் என முதல்வர் சமீபத்தில் அறிவித்திருந்தார். அதன்படி, சேலம் தலைவாசல் அருகே இலத்துவாடி கிராமத்தில், அம்மா மினி கிளினிக்கை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். சேலத்தில் 100 அம்மா கிளினிக்குகள் திறக்கப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக 34 அம்மா கிளினிக்குகள் திறக்கப்படவுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, சென்னை ராயபுரம், வியாசர்பாடி மற்றும் மயிலாப்பூர் ஆகிய பகுதிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று இந்த மினி கிளினிக்குகளை தொடங்கி வைத்தார். இப்போதைக்கு சென்னை மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 200 மினி கிளினிக்குகள் அமைகிறது. இந்நிலையில், மக்கள் பயன்பெறும் வகையில், தமிழகம் முழுவதும் டிசம்பர் 31-க்குள் 2000 மினி கிளினிக்குகள் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
ஆரம்பச் சுகாதார நிலையங்களில் இருக்கும் அனைத்து மருந்துகளும் அம்மா மினி கிளினிக்கிலும் வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 10 நாட்களில், மாநிலம் முழுதும், 2,000 மினி கிளினிக்குகள் செயல்பாட்டிற்கு வரும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ள நிலையில், தற்போது முதல்வர் பழனிசாமியும் அறிவித்துள்ளார்.