200 சவரன் தங்க நகைகள் மற்றும் 7 லட்சம் ரூபாய் பணம் சென்னையில் தொழில் அதிபர் வீட்டில் கொள்ளை!
200 சவரன் தங்க நகைகள் மற்றும் 7 லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை சென்னை வேளச்சேரி அருகே கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் அரளிக்கோட்டையைச் சேர்ந்த இளங்கோஸ்வரன், வேளச்சேரியை அடுத்த சீதாராமன் நகர் ஜெயந்தி தெருவில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். நேற்று இளங்கோஸ்வரன் குடும்பத்தினருடன் கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள சொந்த ஊரான சிவகங்கைக்கு சென்றுள்ளார்.
இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவிலிருந்த 200 சவரன் தங்க நகைகள், சுமார் 7 லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
காலையில் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்ட அருகிலிருந்தோர், போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்த வந்த போலீசார், தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் தடயங்களைச் சேகரித்து கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளங்கோஸ்வரன் வந்த பிறகே கொள்ளைபோன பொருட்களின் மொத்த மதிப்பு தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.