ராகுல் காந்திக்கு சிறை தண்டனை..! ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கே.எஸ்.அழகிரி
ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட்டார் கே.எஸ்.அழகிரி.
கர்நாடகாவின் கோலாறில் 2019 பொதுத்தேர்தல் பரப்புரையில், “எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது” என ராகுல் காந்தி பேசியிருந்தார். இதனையடுத்து, ராகுல்காந்திக்கு எதிராக குஜராத் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் ராகுல் காந்தியை சூரத் நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்துள்ளதோடு, 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த நிலையில், மேல்முறையீடு செய்ய ஏதுவாக ராகுலுக்கு ஜாமீனும் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராகுல்காந்திக்கு குஜராத் சூரத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் கும்பகோணத்தில் சென்னை செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.
கும்பகோணத்தில் இருந்து சென்னை புறப்படவிருந்த கே.எஸ். அழகிரி குஜராத் சூரத் நீதிமன்ற தீர்ப்பை அறிந்து தான் பயணிக்க இருந்த ரயிலை மறித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.