சேலத்தில் வாக்களிக்க சென்ற 2 பேர் உயிரிழப்பு ..!
Election2024: மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சேலத்தில் வாக்களிக்க சென்ற இருவர் உயிரிழந்ததாக தகவல்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பொது மக்கள் என அனைவரும் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
இந்த சூழலில் தேர்தல் ஆணையமும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளது. அந்தவகையில், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக Saksham-ECI எனும் செயலி மூலமும் அல்லது 1950 எனும் மாவட்ட தேர்தல் அலுவலக உதவி எண் மூலமாகவோ சிறப்பு வாகன வசதியை பெற்றுக்கொள்ளலாம்.
இந்த நிலையில், சேலத்தில் வாக்களிக்க சென்ற இருவர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சேலம் கெங்கவல்லி அருகே செந்தராபட்டி ஊராட்ச்சி தொடக்க பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்க சென்ற 77 வயது மூதாட்டி சின்ன பொண்ணு என்பவர் மயங்கி விழுந்து உயிரிழந்ததார்.
இதேபோன்று சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க சென்ற சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி (65) என்பவர் உயிரிழந்தார். பழனிசாமி தனது மனைவியுடன் வாக்களிக்க சென்றபோது மயங்கி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த காரணமாக இருவரும் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.