திருச்செந்தூர் முருகன் கோயில் யானை மிதித்து 2 பேர் உயிரிழப்பு!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள யானை மிதித்ததில் யானை பாகன் மற்றும் பாகனின் உறவினர் உயிரிழந்துள்ளார்.
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் 2வது புண்ணிய தலமாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இக்கோயிலில் தெய்வானை எனும் 25 வயது மதிக்கதக்க யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இதன் பாகனாக உதயகுமார் என்பவர் பணியாற்றி வந்தார். இன்று இவரை காண பாகனின் உறவினர் சிசுபாலன் என்பவர் களியக்காவிளை பகுதியில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், இன்று பிற்பகல் 3.30 மணியளவில், திடீரென கோயில் யானை தெய்வானை மிதித்ததில் பாகன் உதயகுமார் மற்றும் சிசுபாலன் ஆகியோர் படுகாயமுற்றனர் எனக் கூறப்படுகிறது. இதில் சிசுபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
படுகாயமடைந்த யானைப் பாகன் உதயகுமார் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி உதயகுமாரும் உயிரிழந்தார் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. கோயில் யானை மிதித்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். கோயில் யானையின் தற்போதைய மனநிலை குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.