+2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு நாளை அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்!
தமிழகத்தில் நாளை முதல் +2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. அதனைதொடர்ந்து, அக்.14 ஆம் தேதி முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அந்தவகையில் நாளை முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கவுள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ளது. அதன்படி மாணவர்கள் அனைவரும் தங்கள் பயிலும் பள்ளியில் மதிப்பெண் சான்றிதழை பெற்று கொள்ளலாம்.
மேலும், 11 மற்றும் 12 ஆம் வகுப்பில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற பின்னரே, அவர்களுக்கு இரு தேர்வுகளுக்கான தனித்தனி மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும். தேர்ச்சியடையாத மாணவர்களுக்கு இரு தேர்வுகளிலும் பெற்ற மதிப்பெண்களை பதிவு செய்து, ஒரே மதிப்பெண் சான்றிதலாக வழங்கப்படும்.
அதுமட்டுமின்றி, முழுமையாக தேர்ச்சி பெறாதவர்களுக்கு தேர்வெழுதிய பாடங்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்களும் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.