பட்டாசு விபத்து.. உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிதி உதவி.!
காட்டுமன்னார்கோவில் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் முதலமைச்சர் அறிவிப்பு.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி வட்டம் குருங்குடி கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலையில் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் ஏழு பெண்கள் உயிரிழந்தனர். மேலும், 10 பேர் காயம் அடைந்துள்ளனர் என கூறப்படுகிறது.
இந்நிலையில், தமிழக முதல்வர் இந்த விபத்து குறித்து வெளியிட்ட அறிக்கையில், இந்த வெடி விபத்து செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். இந்த விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மீட்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், இறந்தவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும் அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்ய தொழில்துறை அமைச்சர் அவர்களுக்கும், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கும் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த குடும்பங்களின் குடும்ப நிலையை கருத்தில் கொண்டு அவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் முதல்வர் பொது நிவாரணநிதியிலிருந்து வழங்கப்படும், எனவும் அவர் தெரிவித்திருந்தார்.