தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் மட்டும்தான்…!தடையை மீறினால் சிறை உறுதி …!
அனுமதிக்காத நேரத்தில் பட்டாசு வெடிப்பது கண்டறியப்பட்டால்,முதலில், அவர்களுக்கு அறிவுரை, அதையும் மீறும்பட்சத்தில், ஆறு மாதம் சிறை தண்டனை உறுதி என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
தீபாவளி மற்றும் தசரா பண்டிகையின் போது அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மாசு அடைந்து குழந்தைகளுக்கு சுவாச கோளாறு, ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்பு போன்ற நோய்கள் ஏற்படுவதாகவும், எனவே டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி 3 சிறுவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது.
தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்து பட்டாசு தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு அனுமதி வழங்கி அப்போது நீதிபதிகள் தீர்ப்பு கூறினார்கள்.
இந்த தீர்ப்பில் திருத்தம் கோரி தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக அரசு தரப்பில் அரசு வக்கீல் பா.வினோத் கன்னா, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு ஆஜராகி தமிழ்நாட்டுக்கு பட்டாசு வெடிக்கும் நேரம் தொடர்பான திருத்தம் கோரும் மனுவை தாக்கல் செய்திருப்பதாகவும், அந்த மனுவை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் செவ்வாய்க்கிழமை இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர். அதன் படி இந்த மனு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் தமிழகத்தில் 2 மணி நேரமே பட்டாசு வெடிக்கலாம் . எந்த 2 மணிநேரம் என்பதை தமிழக அரசே முடிவு செய்யலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு இருந்தது.
பின் இது தொடர்பாக தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அதில் தீபாவளியன்று தமிழகத்தில் காலை 6-7, இரவு 7-8 பட்டாசு வெடிக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
அதேபோல் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, அந்தந்த காவல் நிலைய பகுதிகளில், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், அனுமதிக்காத நேரத்தில் பட்டாசு வெடிப்பது தமிழகத்தில் கண்டறியப்பட்டால்,முதலில், அவர்களுக்கு அறிவுரை வழங்கப்படும்.அவர்கள் அதையும் மீறும்பட்சத்தில், இந்திய தண்டனை சட்டம், 188 பிரிவில் நடவடிக்கை எடுக்கலாம்.அதாவது, ஆறு மாதம் சிறை தண்டனை அல்லது, ரூ.1000 அபராதம் விதிக்கப்படலாம். இவை இரண்டையும் சேர்த்தும் விதிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.