நிலக்கடலை தோட்டத்திற்குள் புகுந்த யானை தாக்கி 2 விவசாயிகள் உயிரிழப்பு…!
கிருஷ்ணகிரியில் நிலக்கடலை தோட்டத்திற்குள் புகுந்த யானை தாக்கியதில், இரவு நேர காவலுக்கு நின்ற இரண்டு விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநில எல்லையில் அமைந்துள்ள கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி எனும் பகுதியில் உள்ள வனப்பகுதியில் யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் சிலர் அண்மையில் உயிரிழக்கவும் நேரிட்டுள்ளது. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிகரலப்பள்ளி எனும் கிராமத்தை சேர்ந்த, 30 வயதுடைய சந்திரன் மற்றும் நேரலகிரி எனும் கிராமத்தை சேர்ந்த 50 வயதுடைய நாகன் ஆகியோர் கிராமத்திற்கு அருகிலுள்ள அவர்களது நிலக்கடலை தோட்டத்திற்கு நேற்று இரவு காவலுக்காக சென்றுள்ளனர்.
இன்று காலை அவர்கள் வீடு திரும்பாத நிலையில், அவர்களது உறவினர்கள் தோட்டத்துக்கு சென்று பார்த்த பொழுது, இருவரும் யானை தாக்கி உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் கர்நாடக வனப்பகுதியில் இருந்து சிகரலப்பள்ளி வழியாக இந்த யானைகள் வந்திருக்கலாம் எனவும் வனத்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.