#BREAKING: +2 தேர்வு கண்டிப்பாக நடைபெறும் – அமைச்சர் அன்பில் மகேஷ்..!
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், அனைத்து கல்வி நிறுவனங்களும் கடந்த ஓராண்டிற்கு மேலாக மூடப்பட்டு தான் காணப்படுகிறது. இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு கொரோனா தொற்று காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
மத்திய கல்வித்துறை, 12- வகுப்பு பொதுத்தேர்வு என்பது உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கு மிகவும் அவசியமானது என்பதால் பிளஸ் டூ தேர்வு நடத்தியே ஆக வேண்டும் என்று உறுதியாக உள்ளது. இந்நிலையில், பிளஸ்-2 பொது தேர்வு தொடர்பாக மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது.
பிளஸ் 2 தேர்வு தொடர்பாக மத்திய அரசு நடத்திய ஆலோசனையில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர்கள் பொன்முடி, அன்பில் மகேஷ் பேசினர். அப்போது பேசிய அன்பில் மகேஷ், அனைத்து மாநிலத்திலும் உள்ள கல்வித்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர். தமிழகம் சார்பில் நானும் அமைச்சர் பொன்முடி அவர்களும் கலந்து கொண்டோம்.
நாங்கள் இருவரும் கலந்துகொண்டு எங்களது கருத்துக்களையும் முதலமைச்சர் அறிவுரையின்படி தெரிவித்தோம். குறிப்பாக இந்த கூட்டத்தில் சிபிஎஸ்சி மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வு எப்படி நடத்தலாம்..? எப்போது நடத்தலாம்..? என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. ஒவ்வொரு மாநிலத்திலும் இருந்து ஒவ்வொரு விதமான கருத்துக்களை தெரிவித்தனர். மேலும், தமிழகத்தில் கொரனோ பரவல் குறைந்த பிறகு பிளஸ் டூ தேர்வு நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும். தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என அவர் தெரிவித்தார்.
பின்னர், பேசிய அமைச்சர் பொன்முடி தமிழகத்தின் நிலைப்பாடு பற்றி செவ்வாய்க்கிழமைகள் மத்திய அரசுக்கு தெரிவிக்கப்படும். JEE மற்றும் ICR நுழைவுத்தேர்வு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டும் நீட் தேர்வு நடத்த வலியுறுத்தப்பட்டது. மாநில அரசு கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வு நடத்தவேண்டாம் என வலியுறுத்தப்பட்டது என தெரிவித்தார்.