ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட 2 பாடப்பிரிவுகள் தொடர்ந்து நடத்தப்படும் – அண்ணா பல்கலைகழகம்!
ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்த எம்.டெக் பாடப்பிரிவுகள் தொடர்ந்து நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
எம்.டெக் பயோடெக்னாலஜி, எம்.டெக் கம்ப்யூட்டர் டெக்னாலஜி ஆகிய இரு பட்ட மேற்படிப்புகள் கொரோனா தொற்று காரணமாக மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளது என்பதால் இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறாது என ஏற்கனவே பல்கலைக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு எழுதி விண்ணப்பித்துள்ள மாணவிகள் சித்ரா மற்றும் குழலி ஆகியோர் இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீடு முறைக்கு பதிலாக மத்திய அரசு 49.9 சதவீத இட ஒதுக்கீடு கொள்கையை பின்பற்ற கட்டாயப்படுத்த பட்டதால் நடப்பாண்டில் இந்த இரு படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை கிடையாது என அறிவித்துள்ளதாகவும் தமிழக அரசின் இட ஒதுக்கீடு கொள்கையில் மத்திய அரசு தலையிட முடியாது எனவும் பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி புகழேந்தி அவர்கள் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் இது குறித்து கேள்வி எழுப்பிய பொழுது, இனி ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த பாடப்பிரிவுகள் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து எழுத்துப்பூர்வமான விளக்கமும் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு பிப்ரவரி 12ஆம் தேதிக்கு இந்த விசாரணையை நீதிபதி தள்ளி வைத்துள்ளார்.