66 காலி பணியிடங்களுக்கு 2.57 லட்சம் பேர் போட்டி ! தொடங்கியது குரூப்-1 தேர்வு
தமிழகத்தில் காலியாக உள்ள 66 பணியிடங்களுக்கான குரூப்–1 முதல்நிலை தேர்வு மாநிலம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.
குரூப் 1 பணிகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் தோ்வுகளை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா நோய்த் தொற்று காரணமாக தோ்வானது, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலியாக உள்ள 66 பணியிடங்களுக்கான குரூப்–1 தேர்வு மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது.குரூப் 4, 2ஏ தேர்வு முறைகேடு, கொரோனா பரவலுக்குப் பின் அதிக எண்ணிக்கையிலான தேர்வர்களை வைத்து கடும் கட்டுப்பாடுகளுடன் குரூப் 1 தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் நடத்துகிறது.66 பணியிடங்களுக்கு சுமார் 2,57,000 பேர் இத்தேர்வை எழுதுகின்றனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயத்தால் நடத்தப்படும் துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட குரூப்–1 பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு மாநிலம் முழுவதும் 856 இடங்களில் இன்று நடைபெற்று வருகிறது.