அபராதம் மட்டும் 2.40 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது – சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை!
சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அபராதம் மட்டும் 2.40 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை.
தமிழகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரம் அடைந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் தமிழகத்திலேயே அதிக அளவில் சென்னையில் தான் கொரானாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றது. இந்நிலையில் தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து மக்களும் வெளியில் செல்லும்பொழுது சமூக இடைவெளிகளை பின்பற்றி, தனிநபர் பாதுகாப்பு முக கவசங்களை அணிந்து வெளியில் செல்ல வேண்டும் எனவும் தளர்வுகளின் அடிப்படையில் திறக்கப்பட்டுள்ள கடைகளிலும் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் எனவும் இல்லாதபட்சத்தில் அபராதம் விதிக்கப்படும் எனவும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழக நகர்ப்புற மற்றும் ஊராட்சி அமைப்புகளின் சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைக்கான வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி அவர்கள் தலைமையில் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இதில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முகக்கவசம் அணியாத தனி நபர்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை விதிகளை மீறக்கூடிய வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் மீது மட்டும் கடந்த ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் மூன்றாம் தேதி வரையில் 2 கோடியே 40 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகமாக அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.